சென்னை தலைமைச் செயலகத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 10 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தில் அரசின் அனைத்து துறைகளின் ஊழியர்கள் சுமார் 2000 பேர் பணியாற்றி வருகின்றனர். முதல் தளத்தில் டைல்ஸில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் இது நில அதிர்வுக்கான அறிகுறி என்றும் தகவல் வெளியானது. இந்த தகவலை நம்பிய பணியாளர்கள் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவசர அவசரமாக பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த போலீசார் வெளியான தகவல் பொய்யானது. யாரும் அதனை நம்ப வேண்டாம் என மைக் வழியாக அறிவுறுத்தல் கொடுத்தனர்.காவல்துறை அதிகாரி ஒருவர் மைக்கில்,'உங்களோடு தான் நாங்களும் நிற்கிறோம். தயவுசெய்து பணியைத் தொடருங்கள். இங்குள்ள அரசு ஊழியர்களுக்கு அன்பான வேண்டுகோள். நீங்கள் நினைப்பதை போன்று எதுவும் நடக்கவில்லை. கட்டிடம் நல்ல உறுதித் தன்மையோடு இருக்கிறது. தயவுசெய்து வெளியான வதந்தியை நம்பாதீர்கள். அது முழுக்க முழுக்க வதந்தி. தைரியமாக சென்று உங்கள் பணியைப் பார்க்கலாம். எதை வேண்டுமாலும் வாட்ஸப்பில் வதந்தியாக கிளப்பி வருகிறார்கள். நம்ப வேண்டாம்' என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்ஸ்களில் விரிசல் ஏற்பட்ட பகுதியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு வருகிறார்.