பிட்காயினில் முதலீடு செய்தால் தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை வலை விரித்து, பல லட்சம் ரூபாய் சுருட்டிய வாலிபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சேலம் கருப்பூர் அருகே உள்ள புல்லாகவுண்டனூரைச் சேர்ந்தவர் சூர்யகுமார் (37). இவர், கிரிப்டோகரன்சிகளுள் ஒன்றான பிட்காயின் மூலமாக அதிகளவு பணம் சம்பாதிக்கலாம் என அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் சனி, ஞாயிறு தவிர மற்ற நாள்களில் தினமும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதை நம்பிய பலர், அவரிடம் முதலீடு செய்தனர். இதன்மூலம் பல லட்சம் ரூபாய் முதலீடு குவிந்தது.
முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சூர்யகுமார் ஏற்கனவே உறுதியளித்தபடி, நாள்தோறும் 1000 ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். அதன் பின்னர், பணப்பட்டுவாடாவை நிறுத்தி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், சூர்யகுமாரிடம் கேட்டபோது, தானும் மற்றொரு நபரிடம் முதலீடு செய்துள்ளதாகவும், அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்துதான் அவர்களுக்கு பகிர்ந்து வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணத்தை வாங்கிய நபர்கள், திடீரென்று தலைமறைவாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அதே பகுதியில் சூர்யகுமார் 50 லட்சம் ரூபாய்க்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடு வாங்கியுள்ளார். இதன்மூலம் அவர்தான் முதலீட்டாளர்களின் பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சூர்யகுமாரிடம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.