பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தற்போது துவங்கியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார். அங்கு பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் பின்னர், சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார். 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி 30-05-24 அன்று இரவு தொடங்கிய நிலையில், நேற்று 31-05-24 இரண்டாவது நாளாக அவர் தியானத்தை தொடர்ந்தார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக அதிகாலையில் விவேகானந்தர் பாறையை சுற்றி நடையிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது நாள் தியானத்தை பிரதமர் மோடி தொடர இருக்கிறார். கட்டுப்பாடுகளுடன் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.