Skip to main content

அதிகாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்... போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அறிவிப்பு

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

போனஸ், பண்டிகை முன்பணம் வழங்காத அரசு மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பணிமனைகளிலும் 23.10.2019 அன்று அதிகாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபில்யூயு ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

bus



தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு இதுவரை அறிவிக்கப்பட்ட பண்டிகை முன்பணமோ, போனஸோ வழங்கப்படவில்லை.


 

பண்டிகை முன்பணம் ஒரு மாதத்திற்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தசரத்தைக்கூட அரசோ, போக்குவரத்துக் கழக நிர்வாகங்களோ மதிக்கவில்லை. ஊதியம் உள்ளிட்ட பணப்பலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இது சம்மந்தமாக அரசு எவ்வித அக்கறையும் காட்டாத நிலையே உள்ளது. போக்குவரத்து ஊழியர்களை பழிவாங்கும் அடிப்படையிலேயே அரசின் செயல்பாடுகள் உள்ளது.
 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம் நடைபெற உள்ளது. தீபாவளி மட்டுமின்றி பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஆயுதபூஜை, ரம்ஜான் போன்ற எந்த விழாக்காலத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் இருந்து விழாக்களை கொண்டாடுவதில்லை. மக்களின் சேவை என்ற அடிப்படையில் லட்சக்கணக்கான மக்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணியையே முக்கியமாக செய்து வருகின்றனர்.


 

இவ்வாண்டும் அரசு தீபாவளிக்காக சிறப்பு இயக்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் சிறப்பு இயக்கத்திற்கு செல்வதற்கு முன்பு போனஸ், அட்வான்ஸ் பணத்தைப் பெற்று குடும்பத்தினர் பண்டிகையை கொண்டாடக்கூட ஏற்பாடுகள் செய்திட முடியாத நிலையில் மோசமான, மனிதாபிமானமற்ற செயலை அரசும், கழக நிர்வாகங்களும் செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 

தமிழக அரசு தாமதமின்றி உடனடியாக போனஸ், பண்டிகை முன்பணத்தை வழங்க வலியுறுத்தி 23.10.2019 அதிகாலையில் தமிழகம் முழுவதும் அனைத்துப பணிமனைகளிலும் பணி துவங்குவதற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்