Skip to main content

வேலூர் தேர்தல்;வெற்றிபெற்றும் துரைமுருகன் அதிருப்தி!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதியில் அதிமுக சின்னத்தில் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்.

இருதரப்பும் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இந்த தொகுதிக்கான தேர்தலில் சாதி பிரதான இடம் வகித்தது. போட்டியிட்ட இருவரும் தான் சேர்ந்த சமூகத்தின் ஓட்டுக்களே தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு பலமாகவுள்ளனர். இதனால் இருவரும் தங்கள் சமூகத்தை சேர்ந்த வாக்குகளை கவர சிறப்பு கவனம் செலுத்தினர்.

 

Durumurugan dissatisfied in winning Vellore election!

 

ஏ.சி.சண்முகம், தனது சமூகம் சேர்ந்த சிறு சிறு அமைப்புகளை அழைத்து அடிக்கடி ரகசியம் கூட்டம் போட்டு பேசினார். இதில் வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம் நகர நெசவாளர் அணியின் துணை அமைப்பாளர் சி.என்.தட்சணாமூர்த்தி உட்பட சில திமுக பிரமுகர்கள் சமூக பாசத்தில் கலந்துக்கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, சமூகத்திற்கு முக்கியத்துவம் தந்து வேலை செய்யுங்கள் என ஏ.சி.எஸ் கேட்டுக்கொண்டதால் திமுகவை சேர்ந்த சில பிரமுகர்கள், தாங்கள் இருக்கும் கட்சிக்கு துரோகம் செய்யும் விதமாக சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தனர்.

இது தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகின. இதில் நெசவாளர் அணி தட்சணாமூர்த்தி, ஏ.சி.எஸ் நடத்திய ரகசிய கூட்டத்தில் கலந்துக்கொண்டதும், சாதி சங்க கூட்டத்தில் இதே தட்சணாமூர்த்தி, அந்த சங்கத்தின் முக்கிய பிரமுகராக கலந்துக்கொண்டு ஏ.சி.எஸ்க்கு ஆதரவாக பேசியதை அப்பகுதி திமுகவினர் துரைமுருகன் கவனத்துக்கொண்டு சென்றனர்.

தேர்தல் முடிந்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றும் எம்.பியாகியுள்ளார். ஆனால் 8 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை துரைமுருகனால் பொருத்துக்கொள்ள முடியவில்லை, திமுக தலைவர் ஸ்டாலினும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Durumurugan dissatisfied in winning Vellore election!

 

இதனால் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என கட்சியில் நிர்வாகிகளாக உள்ள சிலரின் பெயர்களை துரைமுருகன், திமுக தலைவர் ஸ்டாலினிடம் எழுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இருந்த சி.என்.தட்சணாமூர்த்திதான் தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் இந்த பட்டியலை தலைவரிடம் தந்ததும், இதுப்பற்றி வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏவிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அவர் ஒப்புதலுக்கு பின்பே தட்சணாமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நீக்கல் உத்தரவு செப்டம்பர் 7ந்தேதி வெளியானது. இதனைப்பார்த்து துரைமுருகன் அதிருப்தியானதாக கூறப்படுகிறது. காரணம் அவர் எழுதி தந்தவர்களில் முக்கியமான சிலரை நீக்கவில்லை எனச்சொல்லப்படுகிறது.

அதேபோல், ஏப்ரல் மாதம் தனது வீட்டிலும், ஆதரவாளர்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்ததுக்கு பின்னால் சொந்த கட்சியினரே உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை திமுக தலைவரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வருத்தத்தில் உள்ளார் என்கிறார்கள் வேலூர் திமுகவினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்