திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் பயணிகள் வசதி குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருடன் துரை வைகோ எம்.பி. இன்று (19.08.2024) ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற மக்களைவைத் தொகுதியின் உறுப்பினருமான துரை வைகோ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருடன் நடைபெறும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். ஏற்கனவே, கடந்த மாதம் 11.07.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, வருவாய் கோட்ட அலுவலர் அருள், விமான நிலைய வட்டாட்சியர் ஞானாமிர்தம், விமான நிலைய இயக்குநர், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ஜெயப்பிரகாசம், திருவெறும்பூர் வட்டாட்சியர் லோகநாதன், விமான நிலைய தொழில்நுட்ப மற்றும் அளவீடு செய்யும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலங்களை விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறார்கள். விமான நிலையங்களுக்குப் பயணிகளோடு வருகை தருபவர்களின் பயன்பாட்டிற்காக தற்போது ஒரே இடத்தில் தான் கழிப்பறை வசதி உள்ளது. எனவே, வருகை (arrival) மற்றும் புறப்பாடு (departure) ஆகிய இரண்டு பகுதிகளிலும் பயணிகளோடு வருபவர்களின் பயன்பாட்டிற்காகக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொண்டேன்.
மேலும், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் டேக்ஸி (Taxi) கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆகவே, நிலையான கட்டண அறிவிப்பைச் செய்யும் பலகை ஒன்றை விமான நிலையத்தில் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தேன். பெரும்பாலும் திருச்சி விமான நிலையத்திற்கு வருபவர்கள் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் டேக்ஸியை பயன்படுத்தும் சூழல் இருப்பதில்லை. ஆகவே, பலர் ஆட்டோவை பயன்படுத்துகிறார்கள். பொதுவாக விமான நிலையங்களில் பாதுகாப்பு கருதி ஆட்டோக்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. ஆனால், ஆட்டோவில் வருபவர்கள் திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் இருந்து விமான நிலைய முனையத்திற்குச் செல்ல ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
ஆகவே, பயணிகளின் நலன் கருதி விமான நிலையத்தில் எவ்வளவு தூரம் ஆட்டோக்களை முனையத்திற்கு நெருக்கமாக அனுமதிக்க முடியுமோ அந்த இடத்தில் ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் அமைத்து பயணிகளுக்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். முதல் கூட்டத்தில் நான் வைத்த கோரிக்கையோடு விமானச் சேவையைப் பயன்படுத்துவோரின் கோரிக்கையையும் ஏற்று, தற்போது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருச்சி விமான நிலையத்திற்கு மூன்று வேளை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதியைப் பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் கூடுதலாக ஆக்கப்படும்.
அடுத்து, பயணிகளின் வசதிக்காக விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு நுழைவாயிலில் இருந்து திருச்சி புதுக்கோட்டைப் பிரதான சாலை வரை விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் பயணிகள் அமர்ந்து செல்லும் பேட்டரி கார் போன்ற இலவச ஊர்திகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக்கொண்டோம்.
இந்நிகழ்விற்கு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ் மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆர்.கே.ஆர். வினோத், எஸ்.பி. செல்லத்துரை, மனோகரன், மதிமுக, மாவட்ட பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உதவியாளர் அரியமங்கலம் வெ.அடைக்கலம், மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சுப்பிரமணியன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடன் வந்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.