Skip to main content

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; துரை வைகோ ஆறுதல்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024

 

கடந்த 9ஆம் தேதி சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று சிவகாசி வருகை தந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சொக்கலிங்கபுரம், சின்னையாபுரம், மத்திய சேனை, ரிசர்வ்லைன் அய்யாபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று உயிரிழந்த பத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.

தீவிர காயம்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் துரை வைகோவிடம் முறையிட்டனர். அதைக் கேட்ட துரை வைகோ, அவர்களை நேரில் சந்திக்கவும், உயிர் காக்கும் சிறப்பு மருத்துவ வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்திடவும் டாக்டர் ஏ.ஆர் .ரகுராமன் எம்.எல்.ஏ.வை இன்று காலை நேரில் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “கடந்த 9 ஆம் தேதி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்து போன பத்து தொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். முக்கிய வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினரை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர் படும் வேதனை மனதை வாட்டுகிறது. சின்னஞ்சிறு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தாய் இறந்தது, கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு கணவர் இறந்தது; தாயை விட்டு விட்டு ஒரே மகன் இறந்தது; ஒரே குடும்பத்தில் மூவர் இறப்பு என ஒவ்வொரு குடும்பமும் படும் துயரம்  தாங்க முடியாத துயரமாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெம்பக்கோட்டை ராமுத்தேவன்பட்டி பகுதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்த குடும்பத்தினர் நிலையும் இதே போன்ற துயரம் நிறைந்ததாகத்தான் இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்ப பின்னணி கொண்ட மிக மிக எளிய ஓட்டு வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினரின் எதிர்கால  நிலைய நினைக்கும் போது கவலை தான் மேலிடுகிறது. இறந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு, பட்டாசு ஆலை நிர்வாகத் தரப்பில் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடும்; 50 ஆயிரம் ரூபாய் ஈமச் சடங்கு செலவிற்கும் வழங்கியதாக குறிப்பிட்டார்கள். அரசின் நிவாரணத் தொகை தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக இன்னும் வழங்கப்படவில்லை.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உரிய அனுமதியைத் தேர்தல் ஆணையத்தில் பெற்று மிக விரைவில் அந்த நிவாரண உதவித்தொகையை வழங்கிடச் செய்வார்கள்.

மாவட்ட அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 28 பேர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்து உள்ளனர். இது போன்ற பட்டாசு ஆலை விபத்திற்கு முக்கிய காரணம் அதனுடைய உரிமையாளர்கள் அதிகமாக கட்டணம் பெற்றுக்கொண்டு ஆலையை குத்தகைக்கு விடுவதுதான் என்பதும்; அவ்வாறு அதிக கட்டணம் செலுத்தி குத்தகைக்கு எடுக்கும் குத்தகைதாரர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகமாக மருந்துகளை இருப்பு வைப்பதும், கையாள்வதும் ' அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை விட பன்மடங்கு கூடுதல் தொழிலாளர்களை அனுமதித்து வேலை செய்ய பணிப்பதும் தான்  என்று தெரிய வருகிறது.

இப்படி விதிமீறலில் ஈடுபடுகின்ற உரிமையாளர்கள் குத்தகைதாரர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் போது அதில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக இயங்கி வரும் நிலையில் ஒரு சில உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் செய்யும் விதி மீறல்களாலும், முறைகேடுகளாலும் ஒட்டுமொத்த பட்டாசு ஆலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வகுத்து தந்துள்ள சட்டவிதிமுறைப்படி பட்டாசு ஆலைகளை இயக்கிட வேண்டும். உயிர் இழப்புகள் ஏற்படும் வகையில் திட்டமிட்டு  விதிமீறி பட்டாசு ஆலையை நடத்துவோர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான சட்டப் பிரிவுகளில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இனி வருங்காலத்தில் பட்டாசு  ஆலைகளில் விதிமீறல்கள், உயிர் இழப்புகள் நிகழாத வண்ணம் அரசுத் துறைகள் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இறந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை விரைவில் கிடைக்கப் பெறும் என்பதைப் போல் படுகாயம் உற்ற தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி பெறுவதற்கும் அமைச்சர்களிடமும் எடுத்துச் சொல்லி உள்ளேன். மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்திட  வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், ம.திமுக அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் சிப்பிபாறை  ரவிச்சந்திரன்( ExMP), விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் கம்மாபட்டி வீ.ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ப.வேல்மு முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திமுக கூட்டணியில் திருச்சி பாராளுமன்ற தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கியது.  எனவே அங்கு போட்டியிட்டார். ஆனாலும் விருதுநகர் மக்களுக்கென்று ஏதாவது ஒரு பிரச்சனையென்றால் ஓடோடி வந்து முதல் ஆளாக உதவுகிறார் என்று மக்கள் மத்தியில் பரவலாக பாராட்டினை துரை வைகோ பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்