வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இதில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம், ‘மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தலையிடுகிறது . எங்க மாநிலத்தில் நாங்கள் அணை காட்டுகிறோம் என கர்நாடகா முதலமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளாரே?’ என கேட்டதற்கு, “கர்நாடகா முதலமைச்சர் சித்த ராமையா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரை மதிக்கிறவன். ஆனால் மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியாமல் கருத்துக்களை தெரிவித்துள்ளார்” என பதிலளித்தார்.
இதையடுத்து, டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு தெரிவிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளதே?’ என்ற கேள்விக்கு, “எப்பொழுதும் கர்நாடகா அரசு அப்படி தான் சொல்லி வருகிறார்கள் அதையேதான் இப்போதும் சொல்கிறார்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, ‘தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறதே?’ என்ற கேள்விக்கு, “அப்படியா, எனக்கு ஒன்றும் தெரியாது” பதிலளித்தார்.