மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக அதிகமாகியுள்ளது. 2020 - 2021ல் மின் நுகர்வு 16,481 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான புகார் குறித்த அழைப்புகளுக்கு தீர்வு கண்டு குறைத்துக்கொண்டு வருகிறோம். நேற்று முன் தினம் இருந்ததைவிட நேற்று புகார்கள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று (17ம் தேதி) புகார்களே இல்லாதபடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எங்கெல்லாம் அதிக அளவில் மின் உபயோகம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தீர்வு காண அறிவுறுத்தியிருக்கிறோம்.
கோடைக் காலம் என்பதால் அதிகளவு மின் நுகர்வு இருக்கிறது. இரவு 8 மணி முதல் 12 மணி வரை கூடுதலாக மின் உபயோகம் இருக்கிறது. அதனை சரிக்கட்டவும் தயாராக இருக்கிறோம். சென்னையில் தேவைக்கேற்ப புதிய மின்மாற்றிகள் 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.