ஆற்றில் சிக்கி உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் டி.எஸ்.பி ஸ்ரீதர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிக்கு அருகே உள்ளது பிலிப்பட்டி கிராமம். இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதிலிருந்து 13 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு சென்றனர். மேலும், இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பிலிப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள், அதில் திறமையாக விளையாடி வெற்றியும் பெற்றனர். இதனால் உற்சாகமடைந்த மாணவிகள் தங்கள் ஊருக்குச் செல்லும் வழியில் இருக்கும் மாயனூர் அணைக்கட்டு அருகே உள்ள கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கிய மாணவி ஒருவர் எதிர்பாராத விதமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரைக் காப்பாற்ற சென்ற மற்ற 3 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் சிக்கிய சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளை சடலமாகவே மீட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் புதுக்கோட்டை மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, அந்த மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது, அந்த 4 நான்கு மாணவிகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தங்களது கையெழுத்து இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தது ஏன்? எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் அனுமதியில்லாமல், பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, உறவினர்களிடம் பேசிய குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர், ''உயிரிழந்த மாணவிகளுக்கு மாலை 4 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது. மாணவிகளின் உடல்களை உங்களிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் தான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறை இனிமேல் செய்யமாட்டோம்" என ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு, மாணவிகளின் உடல்களைப் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். கரூர் அரசு மருத்துவமனையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த போராட்டம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.