ஐம்பொன் சிலைகளை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரணிபுரத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் கடந்த 2008ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் இருந்ததை, அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் காதர்பாட்சா(57), ஏட்டு சுப்புராஜ்(48) ஆகியோர் பறிமுதல் செய்தனர். இவற்றை, நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் இருவரும் சேர்ந்து விற்பனை செய்துவிட்டனர். இந்தநிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதும், தனது சிலைகளை காதர்பாட்சாவும், சுப்புராஜூம் விற்பனை செய்தது பற்றி ஆரோக்கியராஜ் புகார் மனு அனுப்பினார். இதற்கிடையில் காதர்பாட்சா பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பக பிரிவு டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சென்னை கோயம்பேடு காவல் நிலைய சிறப்பு எஸ்ஐயாகவும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து சென்னையில் இருந்த சுப்புராஜை கைது செய்தனர். இதையறிந்த காதர்பாட்சா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து காதர்பாட்சாவை காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்து அவரை கடந்த 3 மாதங்களாக தேடி வந்தனர். மேலும் இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து, கடந்த 11ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் கும்பகோணத்தில் இருந்த காதர்பாட்சாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வரும் 27ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.