தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன். இவரின், குடும்பத்தில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியானது கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த நிகழ்வு சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் தடபுடலாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருந்தார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமச்சந்திரனின் குடும்ப உறவினர் பெண் ஒருவரின் ஒன்றரை சவரன் தங்கச் சங்கலி காணாமல் போனது தெரிய வந்தது. இதைக்கேட்டு பதறிப்போன குடும்பத்தினர் என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என தெரியாமல் விழி பிதுங்கி நின்றுள்ளனர். இதையடுத்து, உறவினர்கள் ஒன்றுகூடி காணாமல் போன ஒன்றரை சவரன் தங்கச் சங்கலியை மீட்பது குறித்து கலந்து பேசியுள்ளனர். அதில் எடுத்த முடிவின் படி, நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் யார் மீதும் புகார் அளிக்காமல், வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அங்கே, திருமண மண்டப நிர்வாகியான அந்தோணி ராஜ் என்பவரிடம் நகை காணாமல் போனது தொடர்பாக உதவி கேட்டுள்ளனர். உடனே, நம்பிக்கை தெரிவித்த அந்தோணி ராஜ் முதற்கட்டமாக இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வைத்து, காணாமல் போன நகையை மண்டபம் முழுக்க தேடியுள்ளனர். அதில், மண்டபத்தில் பணியாளராக வேலை செய்யும் மூதாட்டி பாலசுந்தர் என்பவரின் மனைவி அந்தோணியம்மாளும் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து முழு வீச்சில் நடந்த தேடுதல் பணியில், அந்தோணியம்மாள் மண்டபத்தில் நாற்காலிகள் அடிக்கி வைக்கப்பட்ட பகுதியிலிருந்து காணாமல் போன நகையை கண்டுபிடித்தார். இதையடுத்து, மீட்ட தங்கச் சங்கலியை மண்டப நிர்வாகி அந்தோணி ராஜ்ஜிடம் கொடுத்தார். அதனை, அந்தோணி ராஜ் உரிய வழிமுறையாக சாத்தான்குளம் டிஎஸ்பி அருளிடம் காணமல் போன நகையை ஒப்படைத்தார். இதையடுத்து, காணாமல் போன தங்க நகை மீட்கப்பட்ட செய்தி அறிந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதனைத்தொடர்ந்து, தவறவிட்ட ஒன்றரை சவரன் தங்கச் சங்கலியை பேராசிரியர் ராமச்சந்திரன் சாத்தான்குளம் டிஎஸ்பி அருளிடம் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, காணாமல் போன தங்க நகை மீட்டுக்கொடுத்த மூதாட்டி அந்தோணியம்மாளின் நேர்மையை பாராட்டும் விதமாக சாத்தான்குளம் டிஎஸ்பி சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து, அந்தோணியம்மாளின் நேர்மைக்கு அளிக்கும் பரிசாக பேராசிரியர் ராமச்சந்திரன், தனது 10,000 ரூபாய் பணத்தை டிஎஸ்பி அருள் மூலமாகவே பரிசாக அளித்தார்.
இதில், அந்தோணியம்மாளின் நேர்மையை குறிப்பிட்டு பேசும் காவல் உயர் அதிகாரிகள், ''அந்தோணியம்மாள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். தனது குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது மூக்குத்தியை அடகு வைத்து, 2000 ரூபாய் கடன் வாங்கி குடும்ப செலவை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் தான், தவறவிட்ட ஒன்றரை சவரன் தங்கச் சங்கலியை கண்டுப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்'' என கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், முதல் முறையாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த அந்தோணியம்மாள் "ஐயா நான் இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே வந்ததில்லை.. வருவதற்கே பயமா இருந்துச்சு.." என வெகுளியாக டிஎஸ்பியிடம் கலந்துரையாடினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்தோணியம்மாள் நடந்ததை விவரித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.