
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த வாரம் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, ஏட்டு ராஜா இருவரும் அப்பகுதியில் சோதனை செய்து 3,000 பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்களில் 1,500 மட்டும் வழக்கிற்குப் பயன்படுத்தி கணக்கு காட்டி, மீதமுள்ள பாட்டில்களை இவர்களே கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு டி.எஸ்.பி. பால் வண்ணதாசனுக்கு கிடைக்க, நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வுசெய்தார். அதன் பின்னர், கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. பல தகவல்களையும் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்த நிலையில், காவல் ஆய்வாளர் சுமதி, ஏட்டு ராஜா இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.