ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் காட்டு யானையிடம் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அபராதம் விதிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு ஆண் யானை உணவு, தண்ணீர் தேடி சாலை பகுதிக்கு வந்தது. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் யானையைக் கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக மது போதையில் வந்த பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் அந்த யானையிடம் அருகில் சென்று கையைத் தூக்கி கும்பிடு போட்டதோடு யானையை சீண்டும் வகையில் நடந்து கொண்டார். ஆனால், யானை அமைதியாக ஏதும் செய்யாமல் நின்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் யானையிடம் ரகளை செய்த சின்னசாமியை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.