சேலம் அருகே மனைவி, மகன்கள் தன்னை புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொல்ல முயன்ற தறித் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தறித் தொழிலாளி. இவருடைய மனைவி சுசீலா (53). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு ஜூன் 1 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஆறுமுகத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. கடன் பெற்று அவருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டியுள்ளார். குடிப்பழக்கம் உள்ளதோடு, வீட்டில் பொறுப்புடன் நடந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது. இதனால் மனைவி, மகன்கள் அவரிடம் சரியாகப் பேசுவதில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி இரவு, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுசீலாவின் கழுத்தை அறுத்துள்ளார். சுசீலாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். ஆறுமுகத்தை பிடித்து விசாரித்தபோது, ''வீட்டில் யாருமே எனக்கு மரியாதை தருவதில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எனக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை என் மனைவி கீழே தள்ளிவிட்டார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் அவருடைய கழுத்தை அறுத்துவிட்டேன்.'' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.