ஓமலூர் அருகே, குடிபோதை கும்பலின் வெறியாட்டத்தால் ஐ.டி. நிறுவன பொறியாளர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடியாக 4 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சர்க்கரை செட்டிப்பட்டி புதுக்கடை காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் விஷ்ணுபிரியன் (28). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், மே 8ம் தேதி இரவு, பொட்டியபுரம் பேருந்து நிலையம் அருகே விஷ்ணுபிரியன் நின்று இருந்தார். அப்போது அந்த வழியாக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அவர், ஏன் வேகமாக போகிறீர்கள்? மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். இதைக்கேட்டு மது போதையில் இருந்த வந்த இளைஞர்கள், தங்கள் வாகனங்களை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு விஷ்ணுபிரியனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த உள்ளூர்க்காரர்கள் சிலர் விஷ்ணுபிரியனுக்கு ஆதரவாக பேசினர். இதையடுத்து இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுபிரியனை சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணுபிரியனின் தம்பி நவீன் (26) அந்த கும்பலை தடுக்க முயன்றார். ஆத்திரத்தில் நவீனையும் சாலையில் இழுத்துப்போட்டு தாக்கினர். இதில் அவரும் பலத்த காயம் அடைந்தார்.
அதற்குள் ஊர் மக்கள் திரண்டு வருவதை அறிந்த போதை ஆசாமிகள், தங்களுடைய இரண்டு வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு, மற்ற வாகனங்களில் தப்பிச்சென்றனர். அந்த கும்பலைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் மட்டும் உள்ளூர்க்காரர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை மக்கள் சரமாரியாக தாக்கி, மரத்தில் கட்டி வைத்தனர். விட்டுச்சென்ற வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷ்ணுபிரியன், நவீன் ஆகியோரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். விஷ்ணுபிரியனை பரிசோதித்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிந்திருப்பது தெரிய வந்தது. நவீனுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மரத்தில் கட்டி வைத்திருந்த தமிழரசனை கைது செய்து, காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது பொதுமக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி பாஸ்கரன் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், எஸ்பியை சம்பவ இடத்திற்கு வருமாறு முறையிட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரினர். அதன்பிறகு, எஸ்பி தீபா கனிகர் சம்பவ இடம் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். அதையடுத்தே அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
காவல்துறை விசாரணையில், விஷ்ணுபிரியன் கொலை வழக்கில் 11 பேருக்கு தொடர்பு இருப்பதும், குடிபோதையில் இச்சம்பவம் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இரவு முழுவதும் நடத்திய தீவிர தேடுதலில் கொலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை இரவோடு இரவாக கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சிலர் இச்சம்பவத்தை சாதிய மோதலாக சித்தரிக்க முயன்றனர். அதனால் விவகாரம் வேறு திசையில் விசுவரூபம் எடுத்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக, சம்பவம் நடந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருமணமான இரண்டே மாதத்தில் புதுமாப்பிள்ளை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.