குடி போதையில் பள்ளி வேனை ஓட்டி விபத்து: ஓட்டுனரின் உரிமம் ரத்து
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் ஜெயவின்ஸ் என்ற தனியார் சி.பி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பள்ளி வேன் சென்றுள்ளது.
கடந்த, 31-ஆம் தேதி இந்த வேனை கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது-27) என்பவர் ஓட்டியுள்ளார். அவர், மஞ்சினி, ஏரிக்காடு மற்றும் தெற்குகாடு பகுதிகளில் வசித்துவரும் மாணவ, மாணவியரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச்சென்று இறக்கி விடும்போது, தொடர்ந்து, மொபைலில் பேசியபடியே வேனை டிரைவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது, அவர் ஓட்டிச் சென்ற வேன் ஏரிக்காடு என்ற இடத்தில் இருந்த சாலையோர தென்னை மரத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இதையடுத்து வேனுக்கு அருகில் வந்த அப்பகுதி மக்களுக்கு வேன் ஓட்டுனர் மது அருந்திவிட்டு வேன் ஓட்டியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மக்கள் சின்னதுரையை பிடித்து ஆத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அப்போது சின்னதுரைக்கும் லேசான காயம் இருந்ததால் அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். அங்கிருந்த போது மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர், வேன் ஓட்டுனர் போதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்.டி.ஓ.,), அறிக்கை அனுப்பினார்.
இதைதொடர்ந்து, ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி நேற்று வேன் ஓட்டுனர் சின்னதுரையின் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிவசுப்பிரமணியன்