கோப்புப்படம்
ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மீனாட்சி சுந்தரனார் சாலை டெலிபோன் பவனியில் தொடங்கும் மேம்பாலம் பெருந்துறை ரோட்டில் முடிவடைகிறது. இதே மேம்பாலத்தின் மற்றொரு பகுதி அரசு மருத்துவமனை ரோட்டில் முடிவடைகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஒரு காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் திடீரென மேம்பாலத்தில் காரை நிறுத்தி இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் கேக்கை எடுத்து காரின் பின் பகுதியில் வைத்து அதில் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் சத்தம் போட்டு கேக்கை வெட்டியவாறு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
இதை அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். சுமார் 20 நிமிடம் அந்த கும்பல் மதுபோதையில் அங்கே நின்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அந்த கும்பலை எச்சரித்து அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. இதனால் மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.