இந்தியா முழுவதும் இயங்கிவரும் பிரபல பார்சல் நிறுவனத்தின் லாரிகள் நேற்று இரவு பெங்களுரூவிலிருந்து, திருச்சியில் உள்ள தனது மற்றொரு கிளைக்கு வந்துள்ளன. அந்த லாரிகளில் 50 மூட்டைகளில் குட்கா மற்றும் போதை வஸ்துகள் கொண்டு வரப்படுவதாக திருச்சி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் திருச்சி கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல்துறையினர் அந்த லாரிகளை சோதனை செய்துள்ளனர்.
அதில் 22 மூட்டைகள் குட்கா மற்றும் போதை வஸ்துக்கள் இருந்ததையடுத்து அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மற்ற மூட்டைகள் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவை அனைத்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மற்ற மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்கா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.