தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை அமலில் இருக்கும் நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது முடக்கத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 30 முதல் 40 சதவீதம்வரை கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வேதனையும் தெரிவித்துள்ளனர். ஊரடங்கிற்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது பலமடங்கு உயர்ந்து ஒரு மூட்டை சிமெண்ட் 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு யூனிட் எம் சாண்ட் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 3,400 ரூபாயிலிருந்து 3,900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி 3,600 ரூபாயிலிருந்து 4,100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு டன் கட்டுமான ஸ்டீல் கம்பி 68 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல் செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளைச் சார்ந்து வாழும் 20 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர்.