தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நான்கு மாத காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் ஆறு மாதகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், "தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்பதில் நியாயம் இல்லை. கரோனா காலத்தில் சட்டப்பேரவை தேர்தலே நடந்திருக்கும் நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டுவதை ஏற்க முடியாது. எனவே அடுத்த நான்கு மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.