சேலத்தில், பேன்ஸி ஸ்டோர் கடையில் பதுக்கப்பட்டு இருந்த குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரில், இயங்கி வரும் ஒரு பேன்ஸி ஸ்டோர் கடையில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பதுக்கி, விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவுப்பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், புகாருக்குரிய கடையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) திடீர் சோதனை நடத்தினர். அந்த கடைக்குள் சிறு சிறு மூட்டைகளாக போதைப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்தக் கடையில் இருந்து மொத்தம் 229 கிலோ போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். கடை உரிமையாளர்களான ஷவன்ராஜ், மீராராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்தக் கடைக்கும் அதிரடியாக 'சீல்' வைக்கப்பட்டது.
முன்பெல்லாம் மளிகைக்கடைகள், டீக்கடைகள் அல்லது பிரத்யேக கிடங்குகளில் மட்டுமே போதைப்பொருள்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது பேன்ஸி ஸ்டோர் கடையிலும் பதுக்கி வைத்து நூதன முறையில் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.