காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் திராவிட விடுதலை கழகம் சார்பில் நடத்தப்பட்டது.
இதில், 41 பேர் கைது செய்யப்பட்டு, திராவிட விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 13 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து 13 பேருக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.