வட மாநிலத்தில் இருந்து லாரியில் மெத்தபட்டமின் எனும் போதைப்பொருளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாப், மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சென்னை சேர்ந்த சிலர் போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்று வந்தது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் முத்தையால் பேட்டை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி திவான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவரிடம் 100 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
திவானுக்கு மெத்தபெட்டமைன் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் வட மாநிலத்தில் இருந்து போதைப் பொருட்கள் சென்னைக்கு கடத்தி வந்து விற்கும் கும்பல் குறித்து தெரிந்தது. மாதவரத்தில் ரியல் எஸ்டேட் என்று போர்டு வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் இருந்த வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெங்கடேசன் சென்னையில் போதைப்பொருள் விற்கப்படுவதற்கு முக்கிய நபராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து சில்லறையாக போதை பொருட்களை வாங்கி பலர் விற்பனை செய்து வந்ததும். அப்படிப்பட்ட ஒருவராக இருந்தவர்தான் திவான் என்பது தெரிய வந்தது. வெங்கடேசன் குறித்து விசாரித்த பொழுது ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகளுடன் நெட்வொர்க் ஏற்படுத்திக் கொண்டு போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்து வெங்கடேசன் 2014 ஆம் ஆண்டு வெளியே வந்து மீண்டும் போதைப் பொருள் விற்பனையை தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை அறிந்து 'சிக்னல்' என்ற மொபைல் செயலி மூலம் போதைப்பொருள் விற்பனையை நடத்தி இருக்கிறார். அவரிடம் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.