ராஜபாளையத்தை அடுத்துள்ள அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, கணவனை இழந்தவர். பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் இவரை, அதே ஊரைச் சேர்ந்த முருகன்(55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மூதாட்டியின் அலறலைக் கேட்டவர்கள், அங்கிருந்து அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
சேத்தூர் ஊரக காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரித்தபோது, “அயன்கொல்லங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி அருகிலுள்ள காட்டில் குடியிருக்கும் முருகனை கோதுமை வாங்கித் தருவது சம்பந்தமாக பார்க்கச்சென்றேன். அங்கிருந்து திரும்பிய என்னைக் கீழே தள்ளிய முருகன் வன்கொடுமை செய்துவிட்டார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்” என்று கூற, அவரிடமிருந்து புகார் பெற்று முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சொந்தமாக லோடு வேன் வைத்துள்ள முருகன், அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள பட்டியலினத்தவர். மூதாட்டியோ வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். ஊர்த் தரப்பில், மூதாட்டியின் காலில் முருகனை விழவைத்து, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் எனப் பேசிவந்த நிலையில், முருகன் மீது வழக்கு பதிவாகிவிட, அவர் தலைமறைவாகிவிட்டார். முருகனின் மனைவியின் சகோதரர் செல்வராஜ், குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸாக இருக்கிறார். முருகனின் மகன் சக்திவேலுவும் காவல்துறையில் பணியாற்றுகிறார். நெருங்கிய உறவினர்கள் இருவர் காவல்துறையில் இருப்பதால், முருகன் மீதான வழக்கை காவல்துறையினர் பிசுபிசுக்கச் செய்துவிடுவார்கள் என்று பாதிக்கப்பட்ட மூதாட்டி தரப்பில் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியும் சேத்தூர் காவல்நிலைய ஆய்வாளருமான ஆனந்தகுமாரிடம் இதுகுறித்து கேட்டோம், “உறவினர்கள் காவல்துறையில் பணியாற்றினால் குற்றம் சாட்டப்பட்ட நபரை விட்டுவிடமுடியுமா? தலைமறைவான முருகனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். காவலரான அவருடைய மகன் சக்திவேல், முருகனைத் தேடிக் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பதில் உறுதியாக இருக்கிறார். விரைவில் முருகனைப் பிடித்துவிடுவோம்.” என்றார்.