கரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிதியுதவி அளிக்கிறது திமுக அரசு.
இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருக்கும் பாமகவின் இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி, “தமிழ்நாட்டில் நேற்று (14.06.2021) ஒரேநாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள்தான் திறந்துள்ளன என்றாலும், வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது அரசு.
கரோனா நிதியுதவியாக ரூ. 4,200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் 5,000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது என்ன நியாயம்? மக்கள் நோயின்றி குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக் கடைகளை மூடுவதுதான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மது விலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.