




தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கத்தினர், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னை மாநிலத் திட்ட இயக்க வளாகத்தில் (டி.பி.ஐ) தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர்ந்து இன்று (06.02.2021) கண்களில் கருப்புத் துணி கட்டியும், மண்டியிட்டும், 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இதுகுறித்து நக்கீரனிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கணபதி, அவர்களின் கோரிக்கையையும் வேதனையையும் வெளிபடுத்தினார். மேலும் அரசுத் தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், எதிர்கட்சித் தலைவரிடத்திலும் மனு கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கத்தினர் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். மேலும், தமிழக அரசு இவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கிட குரல் கொடுப்போம் என்று தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் இன்று ஒரு ஆசிரியை மயக்கம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.