தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆங்காங்கு விபத்துகளும் நடந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சாந்தி என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர்களிடம் கேட்ட பொழுது விரைவில் இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இறந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று நிவாரண நிதியை வழங்கினர்.
தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கபாலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “எதிர்பார்க்காத சம்பவம் தான். காலை 7 மணியளவில் தண்ணீர் பிடிக்க வெளியில் வந்தார்கள். சுவர் அவர் மேல் விழுந்ததில் தலை எல்லாம் நசுங்கி விட்டது. அந்த நிகழ்வை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் பொண்ணுக்கு வாய் பேச வராது. என் மகன் 12 ஆவது படித்திருக்கிறான். மகனையும் மகளையும் எவ்வாறு கரை சேர்க்கப் போறேன் எனத் தெரியவில்லை. இதற்கு அரசாங்கம் தான் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும். என் மகனுக்கு ஏதும் அரசு வேலை கொடுத்தால் மிக உபயோகமாக இருக்கும். நிவாரணம் கொடுத்துள்ளார்கள். நான்கு லட்சம் ஒன்றும் ஒரு லட்சம் ஒன்றும் கொடுத்துள்ளார்கள். இன்றைக்குப் பொழுது போய்விட்டது. எதிர் காலத்தில் என் மகனுக்கு வேலை ஏதும் கொடுத்தால் என் குடும்பத்திற்கு மிக உதவியாக இருக்கும்” எனக் கூறினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நேரு, “சென்னை புரசைவாக்கம் தாலுக்கா புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து திருமதி. சாந்தி என்பவர் பலியானார். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரின் குடும்பத்தாரிடம் இன்று வழங்கினேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மேயர் ஆர்.பிரியா, ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்” என பதிவிட்டுள்ளார்.