வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.
'பெய்த 6 சென்டி மீட்டர் மழைக்கே சென்னை மாநகரத்தால் தங்க முடியவில்லை' என பாமக நிறுனவர் ராமதாஸ் தெரிவிதிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது' என பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் 6 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராமதாஸ் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளது.