இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி பெரியார், அண்ணா வேடமிட்டு ஒரு அமைப்பினர் நூதன பிரசாரம் மேற்கொண்டார்கள்.
'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற அமைப்பின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில், வாக்காளர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது; அரசியல் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது; ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த இயக்கத்தின் சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலிருந்து பன்னீர்செல்வம் பார்க் வரை பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் வேடமிட்டு பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் விநியோகித்தார்கள்.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, "தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி எங்கள் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்காமல் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வாக்காளர்களிடமும், அரசியல் கட்சியினரிடமும் நேரில் வலியுறுத்த உள்ளோம். முதல் கட்டமாக வாக்காளர்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.