மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், 'மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார்; மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். அப்பொழுது எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல்நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் வைகோ உடல்நலம் பெற வேண்டும் என விருப்பத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக துரை வைகோவை அழைத்து வைகோவின் உடல்நலம்குறித்து நலம் விசாரித்தார்.
இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துரை வைகோ தெரிவித்துள்ளார். 'எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டுமே உள்ளது. வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார். விரைவில் வைகோ பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார். அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என துரை வைகோ தெரிவித்துள்ளார்.