விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். பின்பு சாதித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்த வருகின்றனர். சிலர் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டை தொடங்கியுள்ளார் எனவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பாஜக பிரமுகர் எச்.ராஜா இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ''ஒருவர் சினிமா உலகில் இருக்கிறார் என்பதற்காகவே வெற்றி பெற்றுவார் என்று சொல்ல முடியாது என தமிழ்நாட்டில் சொல்வதை பார்த்திருக்கிறோம். நடிப்புக்கு நடிகர் சிவாஜி கணேசனை போல இன்னொருத்தர் பிறந்து வர வேண்டும். ஆனால் அரசியலில் அவரால் வெற்றி பெற முடிந்ததா? இல்லை. டி.ராஜேந்தர் கட்சி நடத்தினார். பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தார். அப்படி இவர் அரசியலுக்கு வரலாம். அவரை வரவேற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் நாம இதுவரைக்கும் பார்த்திருப்பது நடிகர் என்பதனாலேயே வெற்றி பெற்று விடவில்லை. எம்ஜிஆர் பல வருடம் அரசியலில் இருந்தார். திமுகவில் பொருளாளராக இருந்தார். அதேபோலத்தான் ஜெயலலிதாவும். அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது அவருடைய உரிமை'' என்றார்.