தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் மருத்துவர்களின் பங்கானது மிகவும் அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் மருத்துவர்களும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்துவருகின்றனர். இந்நிலையில், அரசு சாரா சேவை மருத்துவர் சங்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகம் முன்பு 3 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அதில் அவர்களின் கோரிக்கைகளான ‘அனைத்து அரசு சாரா சேவை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை, 2020ஆம் ஆண்டு கரோனா பரவலின்போது செய்தவாறே, பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும் பட்டப்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்திடக் கூடாது. முதுநிலை மருத்துவர்களுக்கான ஊதியம் அரசு ஆணை 94 (G.O. 94) இன் படி வழங்கிட வேண்டும். கரோனா காலப் பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு சாரா சேவை மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர். கார்த்திகேயன் கூறியதாவது, “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் அரசு சாரா மருத்துவ சேவை சங்கத்தின் சார்பாக முதலில் நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தீவிர பரவலை நல்ல முறையில் இந்த அரசு கையாண்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக கரோனா பணியில் ஈடுபட்டுவரும் நாங்கள், கடும் சோர்வுக்கு உள்ளாகி இருந்தோம். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒன்றாக மு.க. ஸ்டாலின், பிபிஇ கிட்டை அணிந்து ஐசியு வார்டுக்குள் வந்து பார்வையிட்டது எங்களுக்குப் பெரும் ஊக்கமாக இருந்தது.
எங்களுடைய படிப்புக் காலம் மே 30ஆம் தேதியோடு 3 வருடங்கள் 36 மாதங்களாக முடிவடைந்தது. அதை நீட்டித்து அறிவித்தது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் கலந்தாய்வின் மூலம் எங்களைப் போன்றவர்களைக் கொண்டும் நிரப்பிட வேண்டும். அதேபோல் ‘கரோனா இல்லாத நாள்தான் மகிழ்ச்சியான நாள்’ என்று முதல்வர் கூறியதற்கு எங்களது சங்கத்தின் சார்பிலும் கடைசிவரை தோள்கொடுத்து உறுதுணையாக இருப்போம் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எங்களது கோரிக்கை முதல்வருக்கும், சுகாதரத்துறை அமைச்சரின் பார்வைக்கும் சென்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார்.