
தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்டந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதுமும் தடுப்பூசி முகாம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி இந்தியா முழுக்க தேசிய மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது. இதனால், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாட்டார்மங்கலம், ‘நம்மால் முடியும் நண்பர்கள் குழு’ சார்பாக கூத்தனூரில் உள்ள தடுப்பூசி முகாமில் கேக் வெட்டப்பட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, மருத்துவர் அருண்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமர், செவிலியர் ஆனந்த் உட்பட நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் என பலர் பங்கேற்றனர்.