நீண்ட ஊரடங்குக்கு முன்னோட்டமாக ஒரு நாள் ஊரடங்கை அறிவித்த இந்தியப் பிரதமர் மோடி, கரோனா தொற்றுக்கு எதிராகத் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் கைதட்டச் சொன்ன போது நாடே ஒன்றிணைந்து கையை மட்டுமின்றி தட்டு, வாத்தியங்களையும் தட்டி தமது அமோக ஆதரவை வெளிப்படுத்தியது. ஆனால், யதார்த்தத்தில் கரோனா தொற்றால் இறந்த மருத்துவர் ஒருவரின் சடலத்தைத் தனியார் மருத்துவமனையும், மயான ஊழியர்களும், மக்களும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டிருக்கிறது அந்தக் கொடூர நிகழ்வு.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான எலும்புசிகிச்சை தொடர்பான மருத்துவர், தனியாக கிளினிக் வைத்து நடத்திவந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என அளவான குடும்பம். அவரிடம் பணிபுரியும் டிரைவர் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை மோசமாக ஆனநிலையில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 13-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். மருத்துவர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, மருத்துவரின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடும்படி கூறியுள்ளனர். கரோனா தொற்றால் மரணமடைவோரின் உடலை என்ன செய்ய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தவரின் சிகிச்சை விவரங்களையே மறைப்பதில் கைதேர்ந்த அப்போலோ நிர்வாகம், கரோனாவால் இறந்த டாக்டரின் உடலைக் கையாள்வதிலும் விதிகளை மதிக்கவில்லை.
அப்போலோ ஊழியர்கள், மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு உரிய தகவல் தராமல் கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த உடலைப் பார்த்ததும் மயான ஊழியர்கள் மிரண்டுவிட்டனர். தங்களுக்குப் போதுமான கரோனா பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவரின் உடலை எரிக்க மறுத்துள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்கான உடைகளை அப்போலோ நிர்வாகம் கொடுத்தனுப்பியிருந்தால், உடனடியாக தகனம் செய்திருக்கலாம். அதன்பின், திருவேற்காட்டிற்கு கொண்டு சென்றனர் ஆம்புலன்ஸ் பணியாளர்கள். அங்கும் அனுமதியில்லாததால் மீண்டும் அம்பத்தூர் மயானத்திற்கு வந்தனர்.
அப்போது அம்பத்தூர் பகுதி மக்களும் திரண்டு வந்து, இறந்த டாக்டரின் உடலைத் தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனைக்கு ஊழியர்கள் அங்குள்ள நிலையைத் தெரிவித்தும் அலட்சியமே வெளிப்பட்டதால், டாக்டரின் உடலை அங்கேயே அப்படியே போட்டுவிட்டுச் சென்றது அப்போலோ அம்புலன்ஸ். இது அம்பத்தூர் மக்களை மேலும் டென்ஷனாக்கியதால், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் அங்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், நோய்த்தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போலா நிர்வாகமே இப்படி உடலைப் போட்டுவிட்டுப் போகிறதென்றால், எங்களுக்கு என்ன பாதுகாப்பு எனக் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் உடல் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
இது குறித்து, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு எல்லாமே தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய வழி காட்டு நெறிமுறைகள் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது இல்லை. தனியார் மருத்துவமனையில் உரிய தகவல் தெரிவிக்காமல் அவசரமாகப் போயுள்ளனர். தலைமைச் செயலாளர் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே இதுபோன்று வந்தால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆக, தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையும், பொதுமக்களின் அறியாமையால் ஏற்பட்ட அச்சமுமே இதற்குக் காரணமாகும். இனி அதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஆள் இல்லாத நேரத்தில், டாக்டரின் உடலை மீண்டும் கொண்டு வந்து எரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் நள்ளிரவிலும் அம்பத்தூர் பகுதி மக்கள் மின்மயானத்திலேயே காவலுக்கு இருந்தனர். இதையடுத்து ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலையில் போரூரில் உள்ள எரிவாயு மயானத்தில் ஆந்திரா டாக்டரின் உடல் எரியூட்டப்பட்டது.
மாநிலத் தலைநகரும் படித்த மக்கள் நிறைந்ததாகச் சொல்லப்படும் சென்னையிலேயே கரோனா அச்சம் இந்த அளவு நிலவுவதும், பிரபலங்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் அப்போலோ நிர்வாகம், ஒரு மருத்துவரின் உடலை கரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர அவசரமாக மயானத்திற்கு கொண்டு சென்று, மக்கள் எதிர்ப்பினால் அப்படியே போட்டுவிட்டு ஓடியதும் இங்கே மருத்துவ அறமும் மனிதாபிமானமும் மிகக் கொடூரமான வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையே காட்டுகிறது.
க.சுப்பிரமணி.