ஒரு சில புகார்களைக் காவல்துறையினர் கையாளும் விதம், புகார்தாரர்களை நோகடித்து நீதிமன்றத்தில் முறையிட வைக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அந்தப் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்கின்றன. அத்தகைய ஒரு வழக்கைப் பார்ப்போம்.
இந்த வழக்கில் புகார்தாரர் தெய்வேந்திரன், மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் எதிரி நல்லதம்பி ஆகிய இருவருமே வழக்கறிஞர்களாக உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை காவல்நிலையம், நல்லதம்பி மீது தெய்வேந்திரன் அளித்த மோசடி புகாரைக் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அந்தக் காவல்நிலையம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
என்ன விவகாரம் இது?
புகார்தாரர் தெய்வேந்திரனும் குற்றச்சாட்டுக்கு ஆளான 2-ஆம் எதிரி தங்கதுரையும் சிவகாசி தாலுகா, தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நல்லதம்பியிடம் டிரைவராக வேலை பார்த்த தங்கதுரை, தெய்வேந்திரனை அணுகி நல்லதம்பியின் மனைவி பெயரில் கீழாண்மறைநாடு கிராமத்தில் உள்ள நிலத்தை கிரையம் செய்துகொள்ளலாமே என்று கேட்க, அவர் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் ராமுத்தேவன்பட்டியிலுள்ள நல்லதம்பியின் வீட்டுக்குச் சென்றார்.
நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் எனக் கிரையம் பேசி, ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனாலும், நல்லதம்பியும் அவருடைய மனைவியும் விவகாரத்து செய்துவிட்டனர் என்பதை அறிந்த தெய்வேந்திரன், விபரம் கேட்டுள்ளார். அதற்கு நல்லதம்பி, ‘நாங்கள் இருவரும் சேர்ந்தே வாழ்கிறோம். விவகாரத்து என்பதெல்லாம் ஊரை நம்பவைக்கும் தந்திரம்’ என்று கூறியிருக்கிறார்.
நல்லதம்பி தன்னிடம் கொடுத்த நிலம் சம்பந்தமான வில்லங்கச் சான்றிதழ் போலி என்பதை அறிந்த தெய்வேந்திரன், கீழராஜகுலராமன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று பார்வையிட்டபோது, அந்த நிலம் ஏற்கனவே கோபால்ராஜா என்பவருக்கு கிரையம் விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ‘நானும் வழக்கறிஞர்; நீங்களும் வழக்கறிஞர். என்னிடமே இப்படி மோசடி செய்யலாமா?’ என்று நல்லதம்பியிடம் தெய்வேந்திரன் நியாயம் கேட்டபோது, ‘நான் வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர். என் உடன்பிறந்த அண்ணன் (கா.காளிமுத்து) முன்னாள் தமிழக அமைச்சர். விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நான் பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவன். இந்த மாவட்டத்தில் எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும் எனக்கு செல்வாக்கு உண்டு. மோசடி புகாரளித்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். கொடுத்த பணத்தைக் கேட்காதே. இல்லையென்றால், அடியாட்களை வைத்துக் கொலை செய்துவிடுவேன்.’ என்று மிரட்டியுள்ளார்.
தன்னிடம் பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த 23-10-2021 அன்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார் தெய்வேந்திரன். 8-12-2021 அன்று வெம்பக்கோட்டை காவல்நிலையம் சென்று நேரிலும் புகாரளித்தார். 21-12-2021 அன்று பதிவுத்தபால் மூலமும் புகார் அனுப்பினார். நல்லதம்பி மிரட்டலாகச் சொன்னது போலவே, அவருக்கு காவல்துறையிடம் இருந்த செல்வாக்கு காரணமாக, தெய்வேந்திரன் புகாரை போலீசார் கண்டுகொள்ளவில்லை. பிறகுதான் நீதிமன்றம் உத்தரவிட்டு, அந்தப் புகார் மீது 29-3-2022 அன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது, வெம்பக்கோட்டை காவல் நிலையம்.
இந்த நல்லதம்பிதான், விஜயநல்லதம்பி என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் பலராமன் உள்ளிட்ட உதவியாளர்கள் மீது ரூ.3 கோடி மோசடி புகார் அளித்து, ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி, காவல்துறையின் தீவிரத் தேடலில் கர்நாடகா மாநிலம் ஹாசனில் கைதானார்.
தெய்வேந்திரன் ஒரு வழக்கறிஞராக இருந்தும், உரிய ஆதாரங்களுடன் அளித்த புகாரை வழக்காகப் பதிவு செய்வதற்கே, அவர் 5 மாதங்கள் போராட வேண்டியதாயிற்று. நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மனுவோடு வரும் சாமானிய மக்களை, இதுபோன்ற காவல்நிலையங்கள் எத்தனை அலைக்கழிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?