
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10/05/2021 அன்று காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல், திருப்பூ,ர் கோவை, சேலம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப்பணி மேற்கொள்ள இருக்கிற நிலையில் தற்போது திமுகவினருக்கு சில வேண்டுகோள்களை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளின்போது திமுகவினர் என்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம். நான் தங்குமிடங்களில் என்னை சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் திமுகவினர் ஈடுபடக்கூடாது. என்னுடைய பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. எனக்கு வரவேற்பு தரும் எண்ணத்தில் கட்சி கொடிகள், பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். 'ஒன்றிணைவோம் வா' பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தரவேண்டும்'' எனக்கூறியுள்ளார்.