விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் அரசு மருத்துவமனை முன்பாக, ‘காலவரையற்ற வேலை நிறுத்தம்.. தொடர் போராட்டம்..’ என்ற பேனரின் கீழ், அவசர சிகிச்சைகள் மற்றும் காய்ச்சல் பிரிவு செயல்படும் என்ற அறிவிப்போடு, அரசு மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘இறங்கி வா.. இறங்கி வா.. தமிழக அரசே இறங்கி வா..
போராடும் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற செவி கொடு.. செவி கொடு..
ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. அரசு மருத்துவர்களை ஏமாற்றாதே!
அடிக்காதே.. அடிக்காதே.. அரசு மருத்துவர்களின் வயிற்றில் அடிக்காதே!
நிறைவேற்று. நிறைவேற்று.. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று!’
என்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் “அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, இங்கே விருதுநகர் மாவட்டத்தில் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாகவே போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் போராட்டமானது நோயாளிகளுக்கு நல்லமுறையில் சேவை செய்வதற்காகத்தான். சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகத்தான் விருதுநகரிலும் போராட்டம் நடத்துகிறோம். கடந்த 7 நாட்களாக எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடாமல் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் விசுவாசமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 10 சதவீத டாக்டர்கள்தான் நாங்கள். தற்போது தமிழக அரசு மருத்துவர் விரோத போக்கினை மேற்கொள்வதால், போராடாமல் இருந்த 10 சதவீத டாக்டர்களையும் போராடும் நிலைக்கு அரசாங்கமே தள்ளியிருக்கிறது.
மருத்துவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே எங்கள் முதல் கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இரண்டு வருட காலமாக முறையாக பல வழிகளிலும் கோரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். முதுகலைப் படிப்பில் 50 சதவீத சர்வீஸ் கோட்டா வேண்டுமென்று. அதைத்தாண்டி சர்வீஸ் PG கவுன்சிலிங். முதுகலைப் பட்டம் படித்த அரசு மருத்துவர்களுக்கு முறையான வெளிப்படையான கவுன்சிலிங் வைத்து இடங்களை நிரப்ப வேண்டும், எதுவுமே பண்ணாமல், பத்து வருட சர்வீஸில் இருக்கிறவர்களைக்கூட டைரக்ட் போஸ்டிங் என்று சொல்லி, மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களை, அதனைச் செய்யவிடாமல் பண்ணுகிறார்கள். பணிச்சுமை ஒருபக்கம்.. கவுன்சிலிங் டைரக்டா நடத்தாமல் போனதால் ஏற்படும் விளைவுகளால் எளிய மக்களுக்கு சிகிச்சை தர முடியாத அளவுக்கு அரசாங்கம் எங்களைத் தள்ளிவிட்டது. போராடும் மருத்துவர்களை சுகாதாரத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் அழைத்து கலந்துபேசி சுமுகமான ஒரு முடிவு எடுத்து அரசு மருத்துவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.” என்றனர்.