பல்லுயிர் பெருக்கத்திற்குத் தேவையான உணவுக்காடுகளை அமையுங்கள்.! தைல மரங்கள் எனப்படும் யூகலிப்டஸ் மரங்களை இங்கு நட வேண்டாம்.! இதனால் நீர் ஆதாரங்களும், வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது", என தைலமரங்களை நடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டுள்ளனர்.
வனத்தோட்டக் கழகத்தால் விளைவிக்கப்படும் தைல மரங்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மரங்கள் பயிடப்பட்ட இடங்களை சுற்றி அகழிகளைத் தோண்டி பாத்திக் கட்டி உழவு செய்வதால் கண்மாய், குளம், குட்டைக்கு செல்ல வேண்டிய மழை வெள்ளம் இங்கேயே தங்கிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இவ்வேளையில், " நீராதாரங்களை அழித்தது மட்டுமில்லாமல், வனவிலங்குகளையும் அழித்து வருகின்றது இந்த தைல மரங்கள். இதனை இங்கு நடக்கூடாது என உழுது செம்மைப்படுத்தியுள்ள இடங்களையொட்டிய தைலக்காடுகளில் புகுந்து சுமார் 250 பெண்களுடன் இணைந்து ஏறக்குறைய 500 ஆண்களுமாக சேர்ந்து காலையிலேயேப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள நாகவயல் கிராமத்தினர்.
"தங்குவதற்கும், தின்பதற்கும் ஏற்றதல்ல இந்த மரங்கள். வெம்மையை மட்டும் உற்பத்தி செய்யும் இந்த தைல மரங்களில் எந்தவொரு பறவையும் கூடு கட்டாது. வசிக்காது. இனப்பெருக்கமும் செய்யாது.! வனத்துறையின் முக்கியக் கடமையே வனத்திலுள்ள உயிர்களைப் பாதுகாப்பது மட்டுமே.! சிவகங்கை மாவட்டத்திலுள்ள காடுகளில் தான் எங்கும் இல்லாமல் மான்கள் அதிகமாக வசிக்கின்றது. அத்தி, ஆலம், இலுப்பை, பலா, வேங்கை, சீதா, நாவல் பழ மரங்கள் உள்ளிட்ட மரங்களால் தான் அவைகள் அங்கேயே இரை தேடி பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக இருந்து வந்தது. இப்பொழுது அத்தனை மரங்களையும் அழித்துவிட்டு தைலமரங்கள் நடுவது என்ன லாபம்..? இதனால் மான்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் காட்டை விட்டு வெளியில் வந்து நாய் கடித்தோ, வாகனத்தில் அடிப்பட்டோ இறக்கின்றன. தைல மரங்களை புறக்கணித்துவிட்டு உணவுக்காடுகளை அமையுங்கள். இதனால் நம்முடைய சந்ததிகள் வளரும். இல்லையெனில் தைலமரங்களை நடவிட மாட்டோம்." என பேச்சு வார்த்தையைத் தொடங்க வந்த காவல்துறை, வருவாய்துறை மற்றும் வனத்துறையினரிடம் பேசி வருகின்றனர் கிராம மக்கள். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.