அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா என்ற பேராசிரியர் நியமிக்கப்பட்டிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க இருமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில், மூன்றாவது முயற்சி வெற்றி பெறும்; அண்ணா பல்கலைக்கழகம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழர் ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சாராத ஒருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சூரப்பா கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்குழு செயலாளர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர், பஞ்சாபில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார். அவரது நிறை - குறைகள் ஒருபுறமிருக்க, பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழகக் கல்வி நிறுவனத்தின் தலைவராக்கப்படுவது நியாயமற்றது.
அண்ணா பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால், அதன் தலைமைப் பதவிக்கு யாரை நியமித்தாலும் அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. மாறாக அண்ணா பல்கலைக்கழகம் தான் தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் ஒழுங்குபடுத்துகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 554 தனியார் பொறியியல் கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என மொத்தம் 584 கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொறியியல் கல்வியின் தரமும், கட்டமைப்பு வசதிகளும் ஒரே மாதிரியாக இல்லை. அவற்றை மதிப்பீடு செய்து தேவையாக இடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிதாக பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை திறத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பொறுப்பு ஆகும்.
தமிழகத்தின் கல்வி, கலாச்சாரம், சமூக, பொருளாதாரச் சூழலை நன்கு அறிந்த ஒருவரால் மட்டும் தான் இந்தப் பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரால் இதை சரியாக செய்வது சாத்தியமற்றது ஆகும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரால் தான் தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத்தரத்திற்கு முன்னேற்றுவதற்காக உணர்வுப்பூர்வமான பாடுபட முடியும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் நிர்வாகத் திறமையில் என்னதான் சிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இது நமது கல்வி நிறுவனம்; இதை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு இருக்காது. அதனால் தான் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க பா.ம.க. வலியுறுத்துகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக துணைவேந்தர்களாக பணியாற்றியவர்கள் மீது கடுமையான குற்றச்சாற்றுகளும், விமர்சனங்களும் எழுந்தது உண்மை தான். அப்பழுக்கில்லாத கல்வியாளர் ஒருவரைத் தான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதும் உண்மை தான். அதற்காக அத்தகைய தகுதிகள் கொண்ட தமிழர்கள் யாருமே இல்லை என்று கூறி, கன்னடர் ஒருவரை நியமிப்பது தவறு. அண்ணா பல்கலைக் கழகம் 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை எத்தனையோ சிறந்த துணை வேந்தர்களைப் பார்த்திருக்கிறது. அவர்கள் அனைவருமே தமிழர்கள் தான். பிற மாநிலங்களைச் சேர்ந்த எவரும் இதுவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டதில்லை. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் ஒரு தமிழருக்கு கூட துணைவேந்தராக நியமிக்கப்பட தகுதியில்லை என்பதை ஏற்க முடியாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக திணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது. இதற்கு முன் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட சூரிய நாராயண சாஸ்திரியும் தமிழகத்தைச் சாராதவர் தான். அதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.வி.இராமுலு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேணுகோபால் ராவ் ஆகிய இருவருமே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் நியமனங்கள் அனைத்தும் இயல்பாக நடந்ததாக கருத முடியாது. இதேப் போக்குத் தொடர்ந்தால் தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே துணைவேந்தராக நியமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு விடும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்கும் முடிவை ஆளுனர் அவர்கள் கைவிட வேண்டும். துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.’’