Skip to main content

ஏழ்மையிலும் லட்சியமே பெரிதென சாதித்த மகாலட்சுமி ! குரூப்-1 தேர்வில் 4- வது இடம்!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

சிவகாசியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மகாலட்சுமி,  ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையிலும் லட்சிய வேட்கையுடன் படித்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் 362 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் நான்காவது இடம் பிடித்துள்ளார். மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கக்கூடிய மகாலட்சுமியின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பைத் தெரிந்துகொள்வோம்!

 

virudhunagar sivakasi  Maheshwari is the poorest and most ambitious 4th place in Group-1 exam!

 

பட்டாசுத் தொழிலாளியான கருப்பசாமியின் மகள்தான் மகாலட்சுமி. சிறுவயதிலிருந்தே கல்வியிலும் சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஏழ்மையின் காரணமாக, தனது தந்தையின் பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். நாள் ஒன்றுக்கு கிடைத்த அதிகபட்ச குடும்ப வருமானம் ரூ.400-ல், மகள் என்ற முறையில் மகாலட்சுமி தன்னுடையை பங்களிப்பாக ரூ.150-க்கு வேலை பார்த்துள்ளார்.

போட்டி தேர்வு திறனை வளர்ப்பதற்கு சென்னை சென்று சிறப்பு பயிற்சி பெறுவதற்காக பெற்றோர் கடன் பட்ட நிலையில், தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தில் வாங்கிய நகைகளையும் அடகு வைத்திருக்கிறார். அரசு வேலையா? திருமணமா? என்று கேள்வி எழ, பெற்றோரை சமாதானப்படுத்தி வைராக்கியத்துடன் படித்துள்ளார். அரசு நிர்வாகப் பொறுப்பிலுள்ள பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் குரூப் தேர்வை கடந்த 4 ஆண்டுகளாக எழுதி வந்துள்ளார்.  4 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் இவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மட்டுமே படித்து, வீட்டு வேலைகளையும் செய்து, பட்டாசு மூலப் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலேயே படிப்பு செலவினங்களைப் கவனித்திருக்கிறார். இத்தனை சிரமங்களையும் சவாலாக எதிர்கொண்டே, தற்போது குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 4-வது இடம் பிடித்துள்ளார் மகாலட்சுமி.

 

virudhunagar sivakasi  Maheshwari is the poorest and most ambitious 4th place in Group-1 exam!

 

செய்திகள் மூலம் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் ஆர்வத்துடன் கவனித்து, சேகரித்து, படித்தும் வந்ததே தனது வெற்றிக்கான காரணம் எனச் சொல்லும் மகாலட்சுமி “அரசுப்பணியில் ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து, அரசு வரம்பிற்கு உட்பட்ட முறையில், உடனடியாக செய்து தர முனைப்பு காட்டுவேன்.” என்கிறார்.  
 

வசதிகள் நிறைய இருந்தும் படிப்பில் கவனம் செலுத்தாமல், லட்சியம் குறித்த சிந்தனையே எழாமல், கல்வி என்பதை பொழுதுபோக்காக எண்ணி, தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி,  ‘டெக்னாலஜி’ என்பதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தாமல்,   பொன்னான நேரத்தை வீணடிப்பவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் மகாலட்சுமி!  

 

 

சார்ந்த செய்திகள்