தி.மு.க இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் நடைபெற்றது. அதன்பின்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளைத் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆலோசனைப்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், ஆத்தூர் மேற்கு ஒன்றியம், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம், மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள நிர்வாகிகள் சேலத்தில் நடைபெறும் 2வது மாநில திமுக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர் அணியினர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு திமுக இளைஞர் அணி சீருடை வழங்க அளவு எடுக்கப்பட்டு அதற்கான சீருடைகளும் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இது சம்பந்தமாக அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், “கடந்த 2007 ஆம் வருடம் நெல்லையில் முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டிற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து திமுக இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அவர் வழியில் இன்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 17 ஆம் தேதியன்று சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். கட்சி வரலாற்றில் 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து மாபெரும் இளைஞர் படை கலந்துகொள்ளும் இளைஞர் அணி மாநாடு முத்திரை பதித்து இந்தியா அளவில் பேசப்படும்” என்று கூறினார்.