தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்தனர். இரவு 07.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பிபிஇ உடையை அணிந்துவந்த கரோனா நோயாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் சுஷ்மா சுவராஜும், அருண் ஜெட்லியும் இறந்ததாகப் பேசியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குப் புகார் சென்றதையடுத்து, நாளை (07/04/2021) மாலை 05.00 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.