திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசனை செய்து பின்னர் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்தனர்.
அதில், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கதவு இலக்கம் தவறுதலாக அச்சிடப்பட்டால் மத்திய அரசு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமாக விதித்திருக்கிறது. அந்த பெரும் அபராத தொகையான ஐம்பதாயிரத்துக்கு பதில் ரூ. 500, ரூ. 1000 எனச் சிறிய அபராதமாக தந்திட வேண்டுகிறோம். அதனைத் தொடர்ந்து, தொழில் சம்பந்தப்பட்ட ஆணைகளை மத்திய அரசு ஆங்கில மொழியில் தான் வெளியிடுகிறது. சிறு குறு வியாபாரிகளுக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லாத காரணத்தினால், அந்த ஆணைகளைத் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்.
மாநகராட்சி, ஒவ்வொரு ஆண்டும் தொழில் நிறுவனத்திற்கான உரிமையை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த உரிமையை இனிமேல் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி எளிமைப்படுத்த வேண்டும். கலை இரவைக் கொண்டாடத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர் என ஐந்து நகரங்களில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதத்துக்குள் நடத்த வேண்டும். எழும்பூர் ரயில் நிலையத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்ட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என அதிமுக நீண்ட காலமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. அவர்களது கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டு அப்போதைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.