திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை ஆதரித்து (05-04-2019) உரையாற்றினார். அதன் முழுவிவரம்:
’’இங்கு நடைபெறுவது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் என்று சொல்வதா, மாநில மாநாடு என்று சொல்வதா, அல்லது வெற்றி விழா கொண்டாட்டம் என்று சொல்வதா என்று சொல்லக்கூடிய அளவிற்கு திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய ஈடு இணையற்ற இளைஞர் அணியின் என் அருமை நண்பர்களே, வணக்கத்திற்குரிய வாக்காளர் பெருமக்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
வருகின்ற 18ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் மத்தியில் மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள். அப்படி நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக டாக்டர் கௌதமசிகாமணி உங்களிடத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் என்று சொல்வதைவிட உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றார். அப்படி ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவருக்கு நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக, உங்களிடத்தில் நான் உரிமையோடு, உணர்வோடு உதயசூரியனுக்கு ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன். காரணம் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதி நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மாபெரும் இயக்கம் தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது. எனவே, அப்படிப்பட்ட நிலையில் உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்தில் டாக்டர் கௌதம சிகாமணிக்கு ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன்.
தலைவர் கலைஞர் வழி நின்று, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது, பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. எனவே அப்படி பாடுபட்டு, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக உங்கள் முன் நிறுத்தப்பட்டு இருப்பவர் தான் டாக்டர் கௌதம சிகாமணி. எனவே, அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும். நிச்சயமாக, உறுதியாக, சத்தியமாக. எனவே, அந்த உணர்வோடு வந்திருக்கக்கூடிய உங்களிடத்தில் சில செய்திகளை, நாட்டு நடப்புகளை, இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை, நீங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியத்தை நான் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.
நான் பார்க்கின்றேன், கள்ளக்குறிச்சி இன்றைக்கு மக்கள் குறிச்சியாக மாறி இருக்கின்றது. நான் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் திரண்டிருக்கக்கூடிய எழுச்சியை காண்கின்றேன். என்ன காரணமென்றால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை அகற்றி விட வேண்டும். மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் திரண்டிருக்கிறீர்கள். மத்தியில் நடைபெறக்கூடிய ஆட்சி கவிழ்க்கப்படுகின்ற அல்லது அப்புறப்படுத்தப்படுகின்றன சூழல் இந்த தேர்தல் மூலமாக வரப்போகின்றது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற நேரத்தில் நிச்சயமாக உறுதியாக, இங்கு மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி தானாக கவிழ்க்கப்படக்கூடிய நிலை உறுதியாக வரப்போகின்றது. கவிழ்க்கப்படக்கூட வேண்டிய நிலை என்று கூட அல்ல தானாக விரட்டப்பட வேண்டிய நிலை உறுதியாக வரப்போகின்றது. பொன்முடி பேசுகின்ற பொழுது, ஒரே மாதம் என்று சொன்னார்கள். நான் சொல்லுகின்றேன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நாம் விரும்புகின்ற, நாம் எண்ணுகின்ற, எதிர்பார்த்து காத்திருக்கின்ற, இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்கு பிரதமராக உட்காருகின்றன நேரத்தில் ஒரு மாதம் அல்ல ஒரே நொடியில் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி தூக்கி எறியப்படும் என்பது உறுதி.
எனவே, அந்த நிலையில் தான் இந்தத் தேர்தலை நாம் சந்திக்கவிருக்கின்றோம். மோடியும் எடப்பாடி பழனிசாமியும் ஒரு நாள் கூட பதவியை தொடர்வதற்கு அருகதை இல்லாத யோக்கியதை இல்லாத நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை, மக்களின் பிரச்னைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை, நாட்டு மக்கள் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவில்லை, பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி.
மாநிலத்தில் ஆளுகின்ற முதலமைச்சர் யாரென்று கேட்டால் உதவாக்கரை. எனவே, அங்கு சர்வாதிகாரி இங்கு உதவாக்கரை. அப்படிப்பட்டவர்களை தூக்கி எறிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த வாய்ப்புதான் வருகின்ற 18ஆம் தேதி என்பதை, நீங்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
சாதாரண மனிதர்களைப் பற்றி, சாமானியர்களைப் பற்றி இவர்கள் இருவரும் கவலைப்படுவதே கிடையாது. ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லி இருக்கின்றார்கள் “நான் சீமான் வீட்டுப்பிள்ளை அல்ல சாமானியனின் வீட்டுப் பிள்ளையாக விளங்கிக்கொண்டு இருக்கின்றேன்”, என்று தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை இதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார். அப்படி சொன்னால் மட்டும் போதாது என்று அதை நிறைவேற்றி, செயல்படுத்திக் காட்டினார். தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் ஆட்சி இல்லாத நேரத்தில் சாமானியனுக்கு குரல் கொடுத்திருக்கிறார், போராடி இருக்கின்றார், வாதாடி இருக்கின்றார். ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற அதேநேரத்தில் அந்த சாமானிய மக்களுக்காக, திட்டங்களை பல்வேறு பணிகளை வியந்தே பார்க்க முடியாத சாதனைகளை அவர் நிறைவேற்றி தந்திருக்கின்றார்.
முதன்முதலில் குளித்தலை தொகுதியில் தலைவர் கலைஞர் அவர்கள் 57ஆம் ஆண்டு நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் முதன்முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அப்படி நுழைந்த நேரத்தில் "கன்னிப் பேச்சு" என்று சொல்லுவார்கள். சட்டமன்ற அவைக்கு வரக்கூடியவர்கள் முதன்முதலாக பேசும் பேச்சுதான் கன்னிப்பேச்சு என்று சொல்லுவோம்.
1957ஆம் ஆண்டு தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களோடு சேர்த்து 15 பேர் காலை உணவு சாப்பிடுகிறார்கள். காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்ற பொழுது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் நான் பேசப்போகின்றேன் என்று சொல்லி, அதில் குறிப்பாக குளித்தலை தொகுதிக்கு உட்பட்டிருக்கக்கூடிய நந்தவனம் பகுதியில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுடைய பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை, போன்ற பிரச்னைகளைப் பற்றி பேசப்போகிறேன் என்று சொல்லி, அனைவரின் முன்பும் பேசிக் காட்டினார். கலைஞர் பேசுகின்ற பொழுது அண்ணா அவர்கள் சொன்னார், கருணாநிதி இங்கு ஏன் இதை பேசுகிறார் என்று சொன்னால், முதன்முதலில் சட்டமன்றத்தில் பேசப்போகிறார் எனவே ஒத்திகை பார்க்கின்றார் என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவையோடு அண்ணா அன்றைக்கு கிண்டல் செய்திருக்கின்றார்கள். இதனை சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தலைவர் கலைஞர் அவர்கள் விவசாயிகளின் மீது, சாமானிய மக்கள் மீது எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இவையெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதன்முதலில் அவருக்கு இருந்த கவலையெல்லாம், விவசாயத் தொழிலாளர்கள் மீது தான் அவருக்கு அதிகமான கவலை இருந்திருக்கின்றது. அதற்கு உதாரணமாக நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், குடியிருப்பதற்கு சொந்தமான மனைக்கட்டுகள் இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் அனைவரும் குடியிருக்கக்கூடிய அந்த மனைக்கட்டு சொந்தம் என்கின்ற ஒரு உன்னதமான சட்டத்தை முதலமைச்சரானதும் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள். 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி இந்தச் சட்டம் ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட காரணத்தினால், அதற்குரியவர்களுக்கு அந்த பட்டா வழங்கிட வேண்டும். எனவே, அந்த பட்டாவை வழங்குவதற்காக ஒரு நிகழ்ச்சி அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. எங்கு என்றால் விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளர் தோழர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதியான திருத்துறைப்பூண்டிப் பகுதியில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த மணலி கந்தசாமி கலந்து கொள்கின்றார்.
அதில் உரையாற்றுகின்ற பொழுது தலைவர் கலைஞர் அவர்களை வாழ்த்தி அவரைப் பாராட்டி பேசுகின்றார். நாங்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால், கலைஞர் அவர்கள் ஒரு சட்டத்தின் மூலமாக எங்கள் உணர்வுகளை வெற்றி பெற வைத்திருக்கின்றார், என்று சொல்லிவிட்டு சொல்லுகின்றார். இது சாதாரண கோரிக்கை அல்ல சற்றேறக் குறைய 100 ஆண்டுகள் காலமாக இருக்கக்கூடிய கோரிக்கை. எனவே, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நான் பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றேன். எங்கள் இயக்கம் பல போராட்டங்களை, தியாகங்களை செய்து இருக்கின்றது. பலமுறை இதற்காக சிறைக்குச் சென்றிருக்கின்றோம். இரத்தம் சிந்திப் போராடி அதனை நிறைவேற்ற முடியாதிருந்த நேரத்தில் பேனாவில் இருக்கக்கூடிய மையில் ஒரு துளி மையை சிந்தி கையெழுத்துப் போட்டு இந்தச் சட்டத்தை கலைஞர் நிறைவேற்றி இருக்கிறார் என்று மணலி கந்தசாமி அன்றைக்கு மனம் திறந்து பாராட்டினார்கள்.
எனவே இப்படிப்பட்ட நிலையில், அந்த அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கடன் ரத்து, மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை, மே தின பூங்கா, அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நல வாரியம், திருநங்கைகளுக்கு நல வாரியம், கிராமங்களில் நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரங்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவிகள் சலுகைகள், குடிசை மாற்று வாரிய திட்டம் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் இப்படி விவசாயிகள் தொழிலாளர்கள் பாட்டாளி பெருமக்கள் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களின் உயர்வுக்காக நடத்தப்பட்ட ஆட்சிதான் கலைஞர் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம்தான் 5 முறை தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.கழகத்தின் ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளம் தான் உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, இதை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். அடித்தட்டு மக்களைப் பொறுத்த வரைக்கும் கோரிக்கைகள் வைக்காமல் அதை நிறைவேற்றித் தந்தவர் கலைஞர். காரணம் அடித்தட்டில் இருந்து வளர்ந்து வந்தவர். அடித்தட்டு மக்களை மறக்காதவர். நான் மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் என்று சொல்கின்ற பொழுது, தலைவர் அடிக்கடி சொல்லுவார், என்னுடைய சமுதாயத்தைப் பற்றி சொல்லுகின்ற பொழுது மிக - மிக - மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்தச் சமுதாயத்தை சார்ந்தவர் என்று சொல்வதில் நான் வெட்கப்படவில்லை, பெருமைப்படுகிறேன் என்று சொல்லுவார்.
எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயம், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம், அருந்ததியர் சமுதாயம், சிறுபான்மையினர் சமுதாயம், பெண்கள் சமுதாயம், திருநங்கைகள் சமுதாயம், மாற்றுத்திறனாளிகள் சமுதாயம் போன்ற சமுதாயங்கள் எல்லாம் முன்னேறுவதற்கு, முற்போக்கான திட்டங்களை, அவர்களுக்கான சமூக நீதி திட்டங்களை கொண்டு வந்து அவர்களை பாதுகாத்த ஒரு மாபெரும் தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஆனால், இன்றைக்கு ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வோடு இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரிய ஐயா, டாக்டர் ராமதாஸ் தலைமையில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருக்கின்றது அரசியல் ரீதியாக ஒரு கட்சி சில மாறுபாடான முடிவு எடுப்பது தவறு அல்ல அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அதில் எந்த குறையும் கிடையாது, அது எதார்த்த நிலை. அதைப்பற்றி நான் விமர்சிக்க தயாராக இல்லை. ஆனால், பெரிய ஐயா என்று அழைக்கக்கூடிய டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது? என்று ஒரு கேள்வியை கேட்கின்றார். நான் பணிவோடு சொல்லுகின்றேன்.
இந்தக் கேள்விக்கு நான் தனிப்பட்ட முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இதற்கு பதிலை நான் எங்கிருந்து தேடி கண்டுபிடித்து இப்பொழுது நான் சொல்லப் போகின்றேன் என்று சொன்னால் டாக்டர் ராமதாஸ் இதற்குரிய விளக்கத்தை அவரே தந்திருக்கின்றார். அதை சாட்சியமாக வைத்து அதை நான் தேடி எடுத்துக்கொண்டு வந்து. இப்பொழுது உங்கள் இடத்தில் நான் சொல்லப் போகின்றேன்.
2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி கோணங்கி கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு நடைபெறுகின்றது. அந்த வெள்ளி விழா மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாகத் தருகிறார். அதை தந்துவிட்டு பேசுகின்ற பொழுது, டாக்டர் ராமதாஸ் என்ன சொன்னாரென்றால், அவற்றில் சில பகுதிகளை மட்டும் நான் படிக்கின்றேன்.
1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டிற்காக ஒரே நாளில் உயிர் தியாகம் செய்த 21 ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் நன்றி சொல்கின்றேன், என்று சொல்லிவிட்டு பேசினார். அடுத்து நான் நன்றி சொல்ல வேண்டியது "நம்முடைய தமிழினத் தலைவர்", தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்று சொன்னார். நாங்கள் போராடினோம், போராடினோம், போராடிக்கொண்டே இருந்தோம். 21 உயிர்களை பலி கொடுத்ததை தவிர எந்தப் பலனும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அன்றைக்கு முதல்வராக இருந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்திக்க எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால், முடியவில்லை பலனும் கிடைக்கவில்லை. கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்தார், என்னிடத்தில் விவாதித்தார், கலந்து பேசினார் அதன்பிறகு இட ஒதுக்கீட்டைத் தருகின்றேன் என்று சொல்லி அதற்கான உத்தரவை போட்டார்கள். அதற்காக நான் கலைஞர் அவர்களுக்கு இதயமார்ந்த நன்றியைச் சொல்லுகின்றேன் என்று அந்த மாநாட்டில் சொன்னவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். மேலும் சொன்னார், நீங்கள் மட்டும் 20 சதவிகித இட ஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால். இன்றைக்கும் நாங்கள் கூலி வேலை செய்துகொண்டு ஓட்டுப் போடுகின்ற ஒரு சமுதாயத்தை சார்ந்தவனாகவே இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்திருக்கும். அதை மாற்றிய பெருமை அதற்கு வழி வகுத்த பெருமை கலைஞர் அவர்களையே சாரும் என்று, தலைவர் கலைஞர் அவர்களை மனதார பாராட்டியவர் பெரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
இப்படிப் பேசிவிட்டு இப்பொழுது என்ன சொல்கின்றார். தலைவர் கலைஞர் என்ன செய்தார்? தி.மு.கழகம் என்ன செய்தது? என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் கேட்கின்றார். இன்னும் சொல்லுகின்றார், இந்தத் தேர்தலோடு தி.மு.க முடிந்துவிடும் என்றும் சொல்லுகின்றார். இப்படிச் சொல்வது அவருக்கு வாடிக்கை, இப்படிக் கேட்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு வேடிக்கை. அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றது. 2006ஆம் ஆண்டும் சொன்னார். அப்பொழுது என்ன சொன்னார் என்றால் நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஒரு இடம் கூட வரக்கூடாது. ஒரு எம்.எல்.ஏ கூட சட்டமன்றத்திற்கு சென்று உட்கார கூடாது என்று சொன்னவர். நான் மரியாதையோடு சொல்கின்றேன். ஆனால், அவர் சொல்லுகின்ற பொழுது என்ன சொன்னார் என்றால் "ஒருவன் கூட" அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ-வாக அவையில் உட்காரக்கூடாது என்று கர்ஜித்தவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். இப்படி அரசியல் நாகரிகம் இல்லாமல் அவர் பேசிவிட்டு, நான் அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று இப்பொழுது ஊர் ஊராக சென்று பெரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நான் இன்னும் சொல்லுகின்றேன், அம்மையார் ஜெயலலிதா அவர்களைப் பற்றி உங்களை விட கேவலமாக பேசியவர்கள் வேறு யாராவது இருக்கின்றார்களா? நான் கேட்கின்றேன். அவற்றையெல்லாம் சொன்னால் நான் இந்த மேடையில் நின்று பேசுவதற்கு தகுதி இல்லாதவனாக போய்விடுவேன். அவற்றையெல்லாம் பேசி என்னுடைய கௌரவத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அந்த அளவிற்கு கேவலப்படுத்தி பேசியவர்கள் நீங்கள். இப்பொழுது ஏதோ அரசியல் இலாபங்களுக்காக - அரசியல் சீட்டுகளுக்காக அல்ல. அரசியல் சீட்டுகளும் உண்டு, அதையும் தாண்டி இலாபங்களுக்காக போய் சேர்ந்து இருக்கலாம். அதற்காக வரலாற்றை தயவு செய்து நீங்கள் மறந்துவிட வேண்டாம் என்று உங்களை நான் மிக பணிவன்போடு கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு, பிற்படுத்தப்பட்ட, சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கலைஞர் என்ன செய்திருக்கிறார் என்று அந்த சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் இன்றைக்கு பாராட்டி, புகழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, டாக்டர்.ராமதாஸ் அவர்களிடமிருந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாராட்டுப் பத்திரத்தை நாங்கள் என்றைக்கும் எதிர்பார்க்க மாட்டோம். அது எங்களுக்கு தேவையும் இல்லை இதுதான் இருக்கக்கூடிய உண்மை. ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் அடையக்கூடியவர்களை, நிச்சயமாக சொல்கின்றேன் நாட்டு மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றார்கள். எனவே, அடையாளம் கண்டு வருகின்ற 18ஆம் தேதி அதற்குரிய சாட்சியை நிரூபிக்க இருக்கின்றார்கள் என்பதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகின்றேன்.
நாம் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம். ஏழைகளின் பிரதிநிதிகளாக நாம் இருக்கின்றோம். நாம் குரலற்ற மனிதர்களின் குரலாக இருக்கின்றோம். அதற்கு உதாரணம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கையை எனது தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்குவதற்கு முதல் நாள் கடந்த 19ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டுவிட்டு தான் தேர்தல் பயணத்தை துவங்கினேன். இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கக் கூடிய உறுதிமொழிகள் வாக்குறுதிகள் அத்தனையும், நீங்கள் ஏற்கனவே ஊடகங்களில் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்க முடியும் படித்திருக்க முடியும். எனவே அதைப் பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை.
இதற்கிடையில் பிரதமராக வரவிருக்கின்றார் என்ற பெருமையோடு, நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
தேர்தல் அறிக்கை வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு சிறப்பான அறிவிப்பை முன்னோட்டமாக வெளியிட்டார். என்னவென்றால் ஏழை, எளிய வறுமையில் வாடக்கூடிய மக்களுக்கு மாதம் 6,000 என்று வருடத்திற்கு 72,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் முறையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இப்பொழுது நம்மை எதிர்த்துப் போட்டியிட கூடியவர்களான பி.ஜே.பி, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆளும்கட்சியான அ.தி.மு.க தேர்தல் களத்தில் பிரச்சாரத்திற்கு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக எடப்பாடி செல்லக்கூடிய கூட்டங்கள் அனைத்தும் பெரிய பெரிய கூட்டங்கள் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல்.
வேனில் கிளம்பி விட்டார். இதற்கு முன்பு அப்படித்தான் ஒருவர் கிளம்பினார். அவற்றையெல்லாம் சொல்லி இந்த மேடைக்குரிய நாகரீகத்தை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏதோ தன்னை எம்.ஜி.ஆர் போன்றே நினைத்துக் கொண்டு செல்கின்றார். தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க-வை விமர்சிக்கின்றார். விமர்சியுங்கள் ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம், அரசியல் நாகரீகத்தோடு. நான் கேட்கின்ற கேள்வி இது நாள் வரையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதனைத் தொடர்ந்து 8 வருடமாக உங்கள் ஆட்சி தான் நடக்கின்றது. ஆட்சியில் என்ன செய்து இருக்கின்றோம் என்று சொல்லுகின்ற அருகதை தெம்பு தைரியம் திராணி அவர்களுக்கு இருக்கின்றதா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
அதேபோல்தான் மத்தியில் பிரதமர் மோடி ஐந்து வருடங்கள் பிரதமராக ஆட்சியில் இருக்கின்றார். நாங்கள் இதை இதை செய்திருக்கிறோம் என்று சொல்லுங்கள். அதற்குப் பிறகு இதையெல்லாம் செய்யப் போகின்றோம் என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு தி.மு.க-வை விமர்சிக்கின்ற நிலையில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆடுவது போலவும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருப்பது போலவும் நம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் வேடிக்கை.
இதைவிட பெரிய ஜோக் என்னவென்றால் எடப்பாடி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி என்கின்றார். ஒரு விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றார். விவசாயி நாட்டை ஆளலாம், அப்படி ஒரு விவசாயி நாட்டை ஆளும்பொழுது ஸ்டாலின் மனப்பூர்வமாக வரவேற்பான் - அதை ஆதரிப்பான். ஆனால், விஷவாயு இந்த நாட்டை ஆளக்கூடாது. எடப்பாடி விவசாயி அல்ல விவசாயி என்று சொல்லுவதற்கு கூட அருகதை கிடையாது. அவர் விவசாயி அல்ல விஷவாயு.
கஜா புயல் டெல்டா பகுதியில் அழித்து வாழ்வாதாரத்தை இழந்து இருந்த மக்களைச் சென்று இந்த விவசாயி சந்தித்தாரா? என்றால் இல்லை. அதன்பின்னர் நாடகம் நடத்த வானிலே பறந்தார்.
தேர்தல் வருவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அப்பொழுது, ஒரு நிருபர் கேட்கின்றார், இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கின்றவர்கள் என்று சொல்கின்றீர்கள், எனவே வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதா என்று கேட்கின்றார். அப்பொழுது எடப்பாடி அவர்கள் என்ன பதில் சொன்னார் என்றால், அதிகமாகி விட்டார்கள் என்பது தவறு. மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. அளவுக்கு மீறி ஆசைப்படுகிறார்கள்.
மக்களை இவ்வளவு கொச்சைப்படுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு பதில் சொல்லுகிறார் என்று சொன்னால், ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா? எவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்கின்றார். வழங்குவதாக சொன்னது அவரது பணம் அல்ல. மக்கள் பணத்தை. அரசின் பணத்தை எடுத்து தானம் தருவது போல மக்களை ஏமாற்ற தேர்தல் சமயத்தில் அறிவிப்பை வெளியிட்டு விட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை ஆகிவிட்டதா என்று நிருபர் கேட்கின்ற நேரத்தில், மக்கள் அதிக அளவிற்கு ஆசைப்படுகின்றார்கள் என்று சொல்லுகிறார் என்று சொன்னால், அப்படிப்பட்ட முதலமைச்சரை தொடர்ந்து அந்தப் பதவியில் உட்கார வைப்பது நியாயமா? என்ற அந்தக் கேள்வியைத் தான் உங்களிடத்தில் நான் கேட்கின்றேன்.
இந்த இலட்சணத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்று அவார்டு எல்லாம் வாங்கி விட்டார். இன்று காலை தொலைக்காட்சியில் ஒரு செய்தி வந்தது, இன்று வந்தது போன்று ஐந்தாறு நாட்களுக்கு முன்பும் ஒரு செய்தி வந்தது. அதுஎன்னவென்றால், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஒரு நபருக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள், அது யார் என்று கேட்டால் போலீஸ் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ரவுடி, எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய நிலையில் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் திடீரென்று ஒரு நாள் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ரவுடிகள் அனைவரையும் அழைத்து உட்காரவைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு பெரிய கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, வீச்சரிவாளால் கேக்கை வெட்டுகின்றான். இதை சட்டமன்றத்தில் பேசினோம். பதில் சொல்ல முடியவில்லை அவர்களால். அதேபோல் இன்று சேலத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் இன்று காலையில் ரவுடிகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கேக் வெட்டும் காட்சி வருகின்றது, எங்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது?
பொள்ளாச்சி கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். இதைவிடக் கொடுமை நாட்டில் எங்காவது நடந்துள்ளதா சொல்லுங்கள். கடந்த 7 வருடமாக 200க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நாட்டில் காவல்துறை, உளவுத்துறை, அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது? இந்த இலட்சணத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றார்.
இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களை தேடி நாடி வந்து இருக்கின்றேன். நேற்றைய தினம் பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசினேன். அப்பொழுது பேசுகின்ற பொழுது குறிப்பிட்டுச் சொன்னேன். ஒரு உறுதிமொழி ஒன்று கொடுத்தேன். பொள்ளாச்சி விவகாரத்தை எந்த காரணத்தைக் கொண்டும் அரசியலாக்க விரும்பவில்லை, காரணம் நமக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். நானும் பெண் பிள்ளைக்கு தந்தை தான். இங்க வந்து இருக்கக்கூடியவர்கள் எத்தனையோ பேர் பெண் பிள்ளைகளை பெற்றிருக்கின்றார்கள். நமக்கு ஒரு சம்பவம் நடந்திருந்தால் துடி துடித்து மாண்டு போயிருப்போம்.
எனவே, இந்த கட்சியில் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களை தப்பிக்க வைக்கின்ற முயற்சியில்தான் இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வருகின்ற பொழுது உறுதியாக சொல்லுகின்றேன். பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களுக்காக அவர்களுடைய பெற்றோருக்காக, உங்களுக்காக நான் சொல்லுகின்றேன். இதற்கு உரியவர்கள் யார்? பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்? என்று கண்டுபிடித்து சிறையில் அடைப்பதுதான் தி.மு.கழகத்தின் முதல் வேலையாக இருக்கும். அதுதான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.
அதேபோல் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணமும் மர்மமாகவே இருக்கின்றது. எப்படி பொள்ளாச்சி சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க நீதி கிடைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னோமோ, அதேபோல், நாட்டின் முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் கொண்டு அடைப்போம்.
அமைச்சர் ஜெயக்குமார் சொல்கின்றார் அம்மையார் ஜெயலலிதா அவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை என்று. முதலமைச்சராக இருந்து மர்மமான முறையில் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் இந்த பிரச்னையை எடுத்து பேசுவது நியாயமான ஒன்று. நீங்கள் எங்கு சென்று தடுக்க முயற்சித்தாலும் நான் விடமாட்டேன் இதை பேசித்தான் தீருவேன்.
தமிழ்நாட்டில் பாதி இடங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சார பயணத்தை முடித்து விட்டேன். இப்பொழுது கொடநாடு விவகாரம் பற்றி பேசக்கூடாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அங்கும் பேசுவதற்கு மறுத்து தடை உத்தரவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துவிட்டார்கள். கொடநாடு உள் விவகாரத்திற்குள் தானே நான் போகக்கூடாது. கொடநாட்டில் நான்கு கொலை நடந்து இருக்கின்றது, இதற்கு யார் காரணம்? என்று நான் கேள்வி கேட்கின்றேன். நான் யார் என்று சொல்லவில்லை? யார் காரணம்? என்று கேட்கின்றேன். இனி மக்களுக்கு தெரியும்.
எனவே, இதற்கெல்லாம் முடிவு கட்டுகின்ற ஒரு விடிவு காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி தருகின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு. உங்களிடத்தில் நம்முடைய அருமை தம்பி, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் டாக்டர் பொன்முடி அவர்களின் அருமைப் புதல்வன்.
வாரிசுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று சில செய்திகள் வருகின்றது, வாரிசுகள் என்ற அடிப்படையில் அல்ல தகுதிகள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
என்னை சொல்லவில்லையா? சொன்னவர்கள் எல்லோரும் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கின்றார்கள். ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்கக்கூடாதா? சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இங்கிருக்கும் பொன் ராமகிருஷ்ணனின் அருமை மகன் அவருக்குத்தானே வாய்ப்பு கொடுத்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாழையடி வாழையாக வாரிசுகள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தாலும் தகுதியின் அடிப்படையில் வெற்றி பெறுபவர், வெற்றி பெற்று வருவார் என்ற உறுதியோடு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது தவிர வேறல்ல.
தேனியில் வாய்ப்பு தந்து இருக்கின்றீர்கள், கொள்ளையடித்துக் கொண்டு பினாமிகள் பெயரில் சொத்துக்களை வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு. அந்தப் பிரச்னைக்கு நான் செல்ல விரும்பவில்லை.
நான் கேட்க விரும்புவது மருத்துவராக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தன்னை ஒப்படைத்துக்கொண்டு இயக்கத்தில் இரண்டறக் கலந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, ஒரு சிறந்த செயல் வீரனை தான் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்ந்தெடுத்து இன்றைக்கு இந்தத் தொகுதியில் வேட்பாளராக நம்முடைய அருமை தம்பி டாக்டர் கௌதம சிகாமணி அவர்களை நாம் நிறுத்தி வைத்திருக்கின்றோம். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
நான் முன்பே குறிப்பிட்டதுபோல் நம்முடைய தலைவர் கலைஞர் இல்லை. அவருடைய மகனாக நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கின்றேன். அவர் இருந்திருந்தால், கரகரத்த குரலில் நம் தோழர்களைப் பார்த்து உடன்பிறப்புகளை பார்த்து உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, என்று அழைத்திருப்பார். இன்றைக்கு அந்த காந்தக்குரல் இல்லை. அண்ணாவின் இதயத்தை இரவலாக வாங்கிக் கொண்டு அண்ணாவிற்கு பக்கத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
ஈரோடு மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னது போல் நம்முடைய வெற்றியை தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது அந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியவில்லை. இல்லாத இந்தச் சூழ்நிலையில் உங்களை நம்பி சொல்லுகின்றேன். உடன்பிறப்பே என்று சொல்லுகின்ற பொழுது அந்த உடன்பிறப்பின் தலைவனாக இன்றைக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கின்றேன். அந்தப் பொறுப்பை உணர்ந்து உங்களை நம்பி சொல்லுகின்றேன். நம்முடைய வேட்பாளர் டாக்டர் அருமை தம்பி கௌதம சிகாமணி அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அந்த வெற்றி மாலையை தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் கொண்டு சென்று வைப்போம். உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம்.’’