மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்கிற வாசகத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்குவோம் என தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்திவருகிறது திமுக. இதில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார். அதோடு, அந்த தொகுதிகளில் திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தையும் நடத்துகிறார்.
அதன்படி பிப்ரவரி 19ந்தேதி காலை வேலூர் மாவட்டம், ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம்சேரி ஊராட்சியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் காலை 9 மணிக்கு கலந்துக்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்கிறார். 11 மணிக்கு ஆம்பூர் அடுத்த சூலூர் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆம்பூர் தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கு மா.செ முத்தமிழ்செல்வி செய்து வருகிறார்.
அதனை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு காலியாகவுள்ள சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். பின்னர் பொன்னப்பந்தாங்கல் என்கிற பகுதியில் நடைபெறும் தொகுதியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மா.செவும், எம்.எல்.ஏவுமான காந்தி செய்து வருகிறார்.
ஊராட்சி சபை கூட்டத்தில் அந்த பஞ்சாயத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் யாரும் கலந்துக்கொள்ளகூடாது, பிற பகுதிகளில் இருந்து கட்சியினர் யாரும் அங்கு வரக்கூடாது என மா.செ காந்தி உத்தரவிட்டுள்ளார்.
தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தினை திமுக பொருளாளர் துரைமுருகன் பார்த்து சில மாறுதல்களை கூறி ஆலோசனை கூறினார். இந்த கூட்டம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என கிழக்கு மற்றும் மேற்கு மா.செ செயலாளர்கள் தீவிரமாக உள்ளனர்.