தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி வெளியே வரவேண்டாம், அப்படி வெளியே
வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். இது சமூகம் சார்ந்தது, தற்போது வரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 144 தடை உத்தரவு பிறப்பித்த உடனே பொதுமக்கள் எப்படி தங்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் என பதறியடித்து போகிறார்களோ அதைவிட வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த சமூகம் பற்றிய பதற்றம் இருக்க வேண்டும். கரோனாவை மற்றவர்களுக்கு பரப்புவதுகூட நீங்கள் செய்யும் ஒருவிதமான சமூக பாதிப்பு தான். மக்கள் அரசிற்கு கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வெளியாகும் தகவல்களை நம்பி விடவேண்டாம். வெளிநாட்டிலிருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கணவரிடமிருந்து மனைவிக்கும், மகனிடமிருந்து தாய்க்கும் கூட கரோனா பாதித்துள்ளது. எனவே தனிப்பட்ட ஒவ்வொருவருமே தனிமையை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் கைட் லைன்ஸ் மற்றும் நம்முடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போதுவரை கூட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. யாருக்கும் கரோனா வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அனைவரும் பணியாற்றி வருகிறோம். கரோனா உறுதிசெய்யப்பட்ட அனைவரது உடல் நிலையும் சீராக உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் அரசிற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்றார்.