பெருந்தொற்றாக பரவி வரும் கரோனா வைரஸ் மனித குலத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஈவு, இரக்கமில்லாமல் நல்ல மனிதர்களையும் தனது கோரப்பசிக்கு இரையாக்கி வருகிறது. இந்த வரிசையில் (30.08.2020) ஞாயிற்றுகிழமை காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் இறந்து விட்டார்.
இவர் நாமக்கல் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலாளராக உள்ளார். ஏற்கனவே குமாரபாளையம் நகர் மன்ற தலைவராக பொறுப்பு வகித்தவர் சேகர்.
இவர் குமாரபாளையம் நகர மன்ற தலைவராக இருந்தபோது கட்சி பேதமின்றி அங்கு வாழும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் முன்னணிச் செயல்பாட்டாளராக விளங்கி வந்தார். அவர் சார்ந்த இயக்கம் தி.மு.க என்றாலும் கட்சி கடந்து பொது மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று தீர்வு காண்பதில், தொடர்ந்து ஒரு முன்களப் பணியாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை இறந்துவிட்டார்.
ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பெற்றும் பயன் இல்லாமல் இன்று காலை மரணமடைந்தார். முன்னாள் நகர் மன்ற தலைவரான சேகரின் இறப்பு, குமாரபாளையம் பகுதியை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகவும் அன்போடும் இணக்கமாகவும் பழகி வந்த சேகரின் இழப்பை தாங்க முடியாமல் குமாரபாளையம் பகுதிமக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளார்கள். தி.மு.க.வுக்கு கொள்கை ரீதியாக எதிர் கருத்து கொண்ட பா.ஜ.க-வினர் கூட கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் தொழில்துறை அமைச்சருமான தங்கமணியும் அவர் சார்பிலும் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் அன்பாகப் பழகிய தி.மு.க சேகர் இறப்பு அந்தப் பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.