சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று மத்திய மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. இதையொட்டி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரான, வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சனிக்கிழமை காலை, சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மனைவி சுசீலாவுடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடும். தமிழக முதல்வரின் கடந்த 8 மாத கால ஆட்சியின் நிர்வாகத்திறன், சாதனைகள், முதல்வரின் அணுகுமுறைகள் ஆகியவை தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும். மகளிருக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். மக்கள் நலனில் 100 சதவீத அக்கறையுடன் ஆட்சி செய்து வருகிறார். முதல்வர் செய்த சாதனைகள், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தரும்.
சேலம் மாநகராட்சி மட்டுமின்றி நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தை அ.தி.மு.க.வின் கோட்டை என்று பகல் கனவு காண்கிறார். இந்த தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்று, அதை தகர்த்தெறிவோம்." இவ்வாறு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.