தமிழகம் முழுவதும் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகம் செய்யும் ஆலைகளை கண்டறிந்து சீல் வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திமுக பொருளாளர் துரைமுருகனின் மருமகளும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மனைவியுமான சங்கீதா பெயரில் அருவி என்கிற குடிநீர் ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த அருவி ஆலையில் மார்ச் 2- ஆம் தேதி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆலையில் 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு ஆழ்துளை கிணறுக்கு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது எனக் காரணம் கூறி அதற்கான லைனை துண்டித்து சீல் வைத்துள்ளனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் சாலை நகரில் இயங்கிவரும் பியூர் அக்வா, அனாண்டபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஆக்குவாஜெல், தூய நெஞ்சக் கல்லூரி அருகில் உள்ள தரணி அக்வா, செலந்தம்பள்ளி கிராமத்தில் உள்ள சைன் அக்குவா, ஆதியூர் கிராமத்தில் உள்ள எம்ஆர்பி அக்குவா ஆகிய 5 குடிநீர் ஆலைகளுக்கு எவ்வித ஆவணமும் இன்றி வாட்டர் கேன்களில் தண்ணீர் நிரப்பி சப்ளை செய்து வந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த நிலத்தடி நீர் அலுவலர்கள் மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் அனுமதி இல்லாத 5 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
இதுவரை வேலூர், திருப்பத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் 45- க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் அனுமதியில்லாமல் இயங்கியதாக சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஆறாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.